எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. குறிப்பாக, பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் அதிகார போட்டி உச்சக்கட்டத்தை எட்டியது.


பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. உச்ச நீதிமன்றம் வரை, இந்த பிரச்னை சென்றது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருப்பதாக கூறி பிரச்னையை தீர்த்து வைத்தது.


இந்த நிலையில், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித். தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.


 






குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், "தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இதர பல கடமைகள் இருப்பதாலும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகி பதவியில் இருந்து விலகுகிறேன். ராஜினாமாவை ஏற்று கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது, காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. அந்த காலக்கட்டத்தில், இந்திரா காங்கிரஸில் சேர்ந்தார். கடந்த 1978ஆம் ஆண்டு, இந்திரா காங்கிரஸ் சார்பாக நாக்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், 1980ஆம் ஆண்டு நாக்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மகாராஷ்டிரா நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.


கடந்த 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில், நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கோரி ராம் மந்திர் இயக்கத்தை தொடங்கியபோது, பாஜகவில் இணைந்தார். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.


1999 ஆம் ஆண்டில், பிரமோத் மகாஜனுடன் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். மீண்டும் காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி தோல்வி அடைந்த காரணத்தால் பாஜகவில் சேர்ந்தார்.


அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராகவும் தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்தபோது, பல சர்ச்சைகளில் சிக்கியதை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.


இதையும் படிக்க: Cervical cancer: தடுப்பூசியால் தடுக்கக் கூடிய ஒரே புற்றுநோய்! கர்பப்பை வாய் புற்றுநோய் காரணம்? அறிகுறிகள்? சிகிச்சை - முழு விவரம்