நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கோலாரில் தக்காளி கிலோ ரூ.250-க்கும், சிக்கமகளூருவில் ரூ.200-க்கும், பெங்களூருவில் ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை கிடு கிடுவென உயர்ந்து வரும் நிலையில் சிலர் தக்காளியை திருடி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. 



இதனால் தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் சிலர் தோட்டங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். மேலும் இரவு-பகலாக தக்காளி தோட்டத்தில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கர்நாடகாவில், தன் தக்காளி தோட்டத்தில் தக்காளியை திருட முயன்ற நபரை விவசாயி ஒருவர் கையும், களவுமாக பிடித்துள்ளார். 

பெலகாவி மாவட்டம்  யாழ்பரட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் அழகவுண்டா. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் இவரது தோட்டத்தில் மர்மநபர்கள் கடந்த ஒரே மாதத்தில் 2 முறை தக்காளியை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், தக்காளியை திருடும் ஆசாமிகளை பிடிக்க  தோட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுட்டு வந்தார்.

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் குமாரின் தோட்டத்திற்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து, தக்காளி செடியில் இருந்து தக்காளியை பறித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த குமார், தக்காளி திருடனை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட நபரை அவர் ஹருகேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அந்த தக்காளி திருடனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்திலும் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.180 வரை விற்பனையாகின்றது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளில் ரூ. 180 முதல் 210 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது. இதனால் ஏராளமானோர் தக்காளி இல்லாதை ரெசிபிகளை சமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி மற்றும் காய்கறிகள் வரத்து அதிகரித்தால் மட்டுமே தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க,


எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்க; நீதிமன்றம் கறார்!


ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு.. எதிர்த்த மனுக்கள் மீது இன்று முதல் விசாரணை!