ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. 


கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டம் 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. 


ஜம்மு - காஷ்மீருக்கான மாநில சிறப்பு அந்தஸ்து பறிபோனதை அடுத்து, பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து, மத்திய அரசின் இந்த ரத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தனர். பல ஆண்டுகளாகியும் இந்த வழக்கானது விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில், இன்று முதல் விசாரணைக்கு வருகிறது. 


5 பேர் கொண்ட அமர்வு விசாரணை: 


தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தொடங்கி நாள்தோறும் விசாரணை நடத்தவுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்படும். திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் விசாரணை நடைபெறும் என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியுள்ளது. இந்த நாட்களில் புதிய மனுக்கள் மட்டுமே சேர்க்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், வழக்கமான வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு ஆவணங்களையும் ஆன்லைன் மூலமாக ஜூலை 27ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த தேதிக்குப் பிறகு எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.


அதனை தொடர்ந்து குறிப்பிடத்தக்க வகையில் ஒரு தகவலையும் பதிவிட்டு இருந்தது. அது என்னவென்றால், இந்த வழக்கு விசாரணையின்போது ஆகஸ்ட் 5, 2019 ஆம் ஆண்டின் 370வது பிரிவை ரத்து செய்யும் அறிவிப்பிற்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் நிலவும் நிலைமைகள் தொடர்பான மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டோம். இதிலுள்ள அரசியல் சாசனம் தொடர்பாக விஷயங்களை மட்டுமே விசாரிப்போம் எனவும் அமர்வு தெரிவித்திருந்தது.