உலகம் முழுக்க மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் போக்குவரத்துகளில் ஒன்று விமான போக்குவரத்து. இதில் பல நிறுவனங்கள் தங்களது விமான சேவையை உலகம் முழுக்க வழங்கி வருகிறது. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் கொண்டு செல்ல சில பொருட்களை தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தினசரி பயணிகளிடம் இருந்து சுமார் 25,000 தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது குறித்த தகவல்கள் ஓரளவு தெரிந்திருந்தாலும், அவ்வப்போது விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது குறித்துத் தெரிவதில்லை. சராசரியாக 4.8 லட்சம் பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். இதில் அதிகபடியாக 44% பவர் பேங்க், 26% லைட்டர்கள் 22% கத்தரிக்கோல் மற்றும் 16% கத்திகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


விமானப் பாதுகாப்பு கலாச்சார வாரம்:




சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு  ஜூலை 31ம் தேதி முதல் அகஸ்ட் 5ம் தேதி வரை விமான பாதுகாப்பு கலாச்சார வாரம் கொண்டாப்படுகிறது. இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் பேசிய பிசிஏஎஸ் தலைவர் சுல்பிகர் ஹசன் கூறியதாவது “பயணத்தின் போது பயணிகள் எடுத்துச் செல்லக்கூடாத தடைசெய்யப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த விமானப் பாதுகாப்பு கலாச்சார வார  நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் மற்றும் நாட்டில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அவசரத் தேவையாக உள்ளது. விமானப் பாதுகாப்பு துறையில் இணைய அச்சுறுத்தல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தற்போது உருவெடுத்துள்ளது. அதோடு, விமான நிலையங்களில் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்றும் அளவிற்கு நமது வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில் விமான போக்குவரத்து 33 சதவீதம் அதிகரித்துள்ளது” என்றார்.


விமான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:




மேலும் அவர் கூறியது “நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்களுக்கு பதிலாக விமான நிலைய காத்திருப்பு பகுதிகளில் வான் பாதுகாப்பு தகவல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் காத்திருக்கும் நேரத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கட்டாயப்படுத்தியுள்ளோம். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் உடல் ஆய்வுக் கருவிகளை (பாடி ஸ்கேனர்) படிப்படியாக அறிமுகப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.


முன்னதாக, ஆண்டுதோறும் 50 லட்சம் பயணிகளைக் கையாளும் அனைத்து விமான நிலையங்களிலும் இந்த சாதனங்களை டிசம்பர் 31, 2023க்குள் நிறுவுமாறு சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு கேட்டுக் கொண்டது குறிப்பிடதக்கது