உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு பரவி வருவதால் மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி பிரதமரின் முதன்மை செயலகம் எச்சரித்துள்ளது.
2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் 69 கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்தது. 3 ஆண்டுகளாக இருந்த கொரோனா தாக்கத்தால் உலகளவில் 60 லட்சத்தும் அதிகமானோர் உயிரிழந்தனர். பேரிடர் காலத்தில் லாக்டவுன், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் கடும் பொருளாதார சரிவு, போக்குவரத்து தடை, பணவீக்கம், உணவு தட்டுப்பாடு என பல பிரச்சனைகளை சந்தித்தன.
கடந்த ஓராண்டாக கொரோனா தாக்கத்தில் இருந்து மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் சூழலில் மீண்டும் உலக மக்களை கொரோனா மிரட்ட தொடங்கியுள்ளது. அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவின் புதிய திரிபான பிஏ.2.86 வைரஸ் பரவி வருகிறது. 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இஜி.5 வகை கொரோனா திரிபும், நான்கு நாடுகளில் பி.ஏ.2.86 திரிபும் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
புதிய வைரஸ் திரிபு குறித்து பேசியுள்ள அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமான சிடிசி, கொரோனாவின் புதிய திரிபு வகையான பி.ஏ.2.86 வைரஸை கண்காணித்து வருவதாகவும், அதன் பாதிப்பு அமெரிக்கா மட்டும் இல்லாமல் இஸ்ரேல், டென்மார்க் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே புதிய வைரஸ் திரிபு குறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அனைத்து நாடுகளும் பிஏ.2.86 கண்காணிப்பை தீவிரப்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், தொற்றுநோய் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் செயல்முறையை விரிவுப்படுத்துமாறு அனைத்து நாடுகளையும் கேட்டு கொண்டுள்ளது.
இந்த சூழலில் புதிதாக பரவி வரும் கொரோனா திரிபு குறித்து பிரதமரின் செயலாளர் பி.கே. மிஸ்ரா உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். நிதி ஆயோக், சுகாதாரத்துறை சார்ந்த பலர் கலந்து கொண்ட இந்த ஆலோசனையில் புதிதாக உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸின் திரிபு குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் அளவுக்கு சுகாதார செயல்படுகள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற பி.கே.மிஸ்ரா, புதிய வைரஸ் பாதிப்பு குறித்து மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவலுக்கான மாதிரிகளை பரிசோதனை செய்வதுடன், அதன் மரபணு குறித்த ஆய்விலும் ஈடுபட மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் 2,96,219 பேருக்கு புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் 223 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக தரவுகள் கூறுகின்றனர்.