இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


கனமழை பாதிப்புகள்


கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச மாநிலத்தின் சீரமைப்பு பணிகளுக்காக உதவி செய்ய தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்,  நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கடந்த வாரத்தில் சிம்லா சம்மர் ஹில்ஸ் பகுதியில் கனமழையால் சிவன் கோயில் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஃபாக்லி பகுதியில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. இங்கு 15 பேர் வரை சிக்கியிருக்கிலாம் என அஞ்சப்படுகிறது. சோலான், ஜடோன், பலேரா ஆகிய கிராமங்களில் பெய்த இடைவிடாத மழை காரணமாக 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பானல் கிராமல் ஒரு பெண் உயிரிழந்தார். மண்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மீட்கப்பட்டனர். இமாச்சலபிரதேசத்தில் 752 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் ஜூன் 24 ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து ஆகஸ்ட் -12ம் தேதி வரை, ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாதிப்புகளால் ரூ.6,807 கோடி அளவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துகளில் இதுவரை 225 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர் கனமழையால் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.11 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர். 


தமிழ்நாடு அரசு நிதியுதவி


இமாச்சல பிரதேசத்தில் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்ப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங்-கிற்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்.


இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் காரணமாக அம்மாநில மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட கடும் சேதங்கள் தன்னை மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. மிகவும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை திறமையாக மேற்கொண்டு வருவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரருக்கு என் பாராட்டுகள். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக இமாச்சல பிரதேச அரசுக்கு ரூபாய் 10 கோடி” வழங்குவதாக  தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


முன்னதாக, இன்று (22-08-2023) காலை இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொலைபேசியில் தொடர்புகொண்டு, பேரிடரால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். 


கனமழை எச்சரிக்கை


இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மிகபலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சம்பா, மண்டி மாவட்டடங்களில் திடீர் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. பெருமழை காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் உயந்து மண் சரிவுகள் ஏற்படுவதுடன் வயல்களில் பயிர்கள் முழ்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.