சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இஸ்ரோ அறிவிப்பு:


இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “நிலவின் தென் துருவத்தை ஆராயும் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி,  திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் அனைத்து சோதனைகளையும் செய்யப்பட்டு வருகிறது. லேண்டரை தரையிறக்கும் பணி எந்த பிரச்னையும் இன்று தொடர்கிறது. சந்திரயான் 3 திட்டம் உற்சாகத்துடன் தொடர்ந்து வருகிறது. லேண்டர் தரையிறங்கும் நிகழ்வின் நேரலை நாளை மாலை 5.20 மணி முதல் தொடரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.






 


அதோடு, கடந்த 19ம் தேதி 70 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டரில் உள்ள கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


சந்திரயான் 3:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 39 நாட்கள் பயணம் செய்து நிலவை நெருங்கியுள்ள அந்த விண்கலத்தின்  விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க தயாராக உள்ளது. தற்போதைய சூழலில் நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க திட்டமிட்டுள்ளது.


இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சோதனை:


அதேநேரம், லேண்டரை தரையிறக்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக நிலவில் உள்ள சூழல்கள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். அப்போது அனைத்து சூழல்களும் சாதகமாக இருந்தால் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் லேண்டர் தரையிறக்கப்பட்டு அடுத்த 14 நாட்களுக்கு, நிலவு தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். ஒருவேளை சூழல் சாதகமாக அமையாவிட்டால் நான்கு நாட்கள் கழித்து 27ம் தேதியன்று, லேண்டரை தரையிறக்க மாற்று திட்டமும் தயார் நிலையில் உள்ளது. அப்படி நடந்தால் லேண்டரில் இருந்து வெளியேறும் ரோவர், நிலவின் மேற்பகுதியில் வெறும் 10 நாட்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்யும். இது இந்தியாவிற்கு ஒரு இழப்பாக கருதப்படும். அண்மையில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் நோக்கில் சீனாவின் லூனா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக அந்த விண்கலம் கீழே விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.