பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தென்னாப்ரிக்கா புறப்பட்டார்.


பிரதமர் மோடி தென்னாப்ரிக்கா பயணம்:


தென்னாப்ரிக்காவில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென்னாப்ரிக்கா புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் மோடி தனது பயணத்தை தொடங்கினார். கொரோனா பரவல் காரணமாக 2019ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக பிரிக்ஸ் மாநாடு ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும், இந்த மாநாட்டிற்கு தென்னாப்ரிக்கா தலைமை தாங்குகிறது. இதையடுத்து, அந்த நாட்டின் அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 






தலைவர்கள் பங்கேற்பு:


பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பாக கடந்த 2010ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் ஜோகன்ஸ்பர்க்கில் இன்று தொடங்கி வரும் 24ம் தேதி வரையில் 15வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இதில், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். அதோடு, பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வங்கதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர். அதேநேரம், ரஷ்ய அதிபர் புதின் இந்த மாநாட்டில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


பிரிக்ஸ் அமைப்பு விரிவாக்கம்:


மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொது நாணயம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்லது. அதோடு பிரிக்ஸ் அமைப்பில் மேலும் சில நாடுகளை சேர்த்து விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த அமைப்பில் இணைவதற்காக சுமார் 23 நாடுகள் விண்ணப்பித்து இருப்பதால் அதுகுறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் கூடுதலாக நாடுகளை சேர்ப்பதற்கு இந்தியா மற்றும் சினா ஏற்கனவே ஆதரவு தெரிவித்து உள்ளது. 


பிரதமரின் பயண விவரம்:


3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கும் மோடி, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 'பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்' நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். தொடர்ந்து அங்கு வருகை தரும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை நேருக்கு நேர் சந்தித்து, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதேநேரம், சீன அதிபரை சந்திப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.


40 ஆண்டுகளுக்குப் பின்:


மாநாடு முடிந்ததுமே 24ம் தேதி இரவே தென்னாப்ரிக்காவில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, 25ம் தேதியன்று கிரீஸ் நாட்டிற்கு செல்கிறார். அந்த நாட்டிற்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது  கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து மோடி ஆலோசனை நடத்துகிறார். மேலும் இருநாட்டு வர்த்தக தலைவர்களை சந்தித்து பேசுவதுடன், அங்கு வாழும் இந்தியர்களுடனும் கலந்துரையாடல் நடத்துகிறார். தொடர்ந்து அன்று இரவே பிரதமர் மோடி நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.