தமிழ்நாடு:  



  • சென்னை பகுதியில் மப்பேடுவில் அதிநவீன பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே கையெழுத்திடப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு கிராமத்தில் 158 ஏக்கர் நிலத்தில் ரூபாய் 1045 கோடியில் இந்த பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைய உள்ளது. 

  • முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று ஆளுநர் ஆர் என் ரவியை மரியாதை நிமித்தமாய் சந்தித்து பேசினார்.

  • தமிழகத்தில் பலன் தரும் பயறு உற்பத்தி திட்டத்தின்கீழ், நடப்பாண்டில் 61 ஆயிரம் மெட்ரிக் டன் துவரை, உளுந்து, பாசிப்பயிறு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்று மாநில வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விலை ஆதரவு திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாநில வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் இதற்கான பிரதான கொள்முதல் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உளுந்து கிலோ 62 ரூபாயும், பச்சைப்பயிறுக்கு 72 ரூபாய் 75 பைசாவும் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடமாற்றம் கோரி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான புதிய வலைதளத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நேற்று தொடங்கி வைத்தார்.

  • திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்களில் உள்ள பயன்பாடற்ற பொன் இனங்களை தங்கக்கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


இந்தியா: 



  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்குக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  • தேசிய பல்முனை போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் பல்வேறு பொருளாதார மண்டலங்களை இணைப்பதற்காக “கதி சக்தி” என்ற திட்டத்தினை தொடங்கி பிரதமர் தொடங்கி வைத்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான புதிய தற்சார்புடன் கூடிய இந்தியாவை படைப்பதற்கான நடவடிக்கைகளை இத்திட்டத்தின் வாயிலாக எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.   

  • மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற  சைனிக் பள்ளிகளுடன் முதற்கட்டமாக நூறு தனியார் மற்றும் அரசு பள்ளிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

  • உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. வரும் 18-ஆம் தேதி முதல் விமானங்கள் நூறு சதவீத பயணிகளுடன் இயங்கலாம் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், கோவிட்-19 நோய்த்தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அது அறிவுறுத்தியுள்ளது.

  • நிலக்கரி இந்தியா நிறுவனம் உட்பட  அனைத்து இடங்களிலிருந்தும்,நேற்று அனல்மின் நிலையங்களுக்கு இரண்டு மில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் போதிய கையிருப்பை உறுதி செய்ய நிலக்கரி விநியோகம் மேலும் அதிகரிக்கப்படும் என்று நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி  தெரிவித்துள்ளார்.


விளையாட்டு: 


ஷார்ஜா-வில் நடைபெற்ற 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில், கொல்கத்தா அணி, டெல்லியை, 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதையொட்டி,வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை கொல்கத்தா எதிர்கொள்கிறது.