ஓடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை  திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி  எம்பி சந்தித்து பேசினார். நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி முதல்வர் முக.ஸ்டாலின் எழுதிய கடிதம் மற்றும் நீட் தேர்வின் பாதிப்புகளை ஆய்வு செய்யும் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் அவர் வழங்கினார். 


கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும் அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டும் எனக் கோரியும் மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாத துவக்கத்தில் கடிதம் எழுதினார். கடந்த சில ஆண்டுகளாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஏகே ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை அத்துடன் இணைத்து அனுப்புவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாவதைத் தடுக்கவும், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தார். மேலும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர் நோக்குவதாக அவர் தெரிவித்திருந்தார்.


இதையடுத்து, கடிதம் எழுதியதோடு நிற்காமல், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் ஆந்திரா, கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்களையும், தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகனை நேரில் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய தமிழக முதலமைச்சரின் கடிதத்தை ஏற்கெனவே வழங்கியிருந்தார்கள்.
இந்நிலையில், ஓடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை  திமுக மகளிர் அணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, மொழி பெயர்க்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அரசுக்கு அளித்த அறிக்கையையும் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும் வழங்கினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண