Headlines News Today, 08 Oct
- உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் இரண்டு கூட்டாளிகளை காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஆஷிஷ் மிஸ்ராவை இன்று நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்திற்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர,பெற்றோர்கள் இறந்த தேதியில் சம்பந்தபட்ட குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக (back-to-back loan facility) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ 40,000 கோடியை இந்திய அரசு வழங்கியுள்ளது. பொதுவாக, செஸ் வரி வசூலில் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கு கூடுதலாக மேற்கண்ட தொகை வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் காக்கவே புதிய மீன்வளச் சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார். நேற்று, ஆந்திரா மாநிலம் நெல்லூரில் மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அவர், " மத்திய அரசால் சர்வதேச தரத்திலான 5 பிரத்யேக மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ளது" என்று தெரிவித்தார்.
- ஒரு மாநில அரசு மற்றும் மத்திய அரசின் தலைவராக 20 ஆண்டுகள் பொது சேவையை நிறைவு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித் ஷா, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 24,602 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,44,198 ஆக குறைந்துள்ளது. கடந்த 204 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.
மேலும், வாசிக்க:
SC on Lakhimpur Incident: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவில்லை - உச்சநீதிமன்றம் விளக்கம்
- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கொள்முதல் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், தற்போது தமிழ்நாட்டில் குறுவைப் பருவ நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, அப்பணிகளை ஆய்வு செய்தார்.
- நாளை முதல் (9) அக். 19ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரப்படி 1,390 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,45,846மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,390 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 173 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 27 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று: 27 பேர் உயிரிழப்பு!
- இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா நாட்டைச் சேர்ந்த திரு அப்துல் ரசாக் குர்நா என்ற புகழ்மிக்க எழுத்தாளருக்கு வழங்கப்படுவதாக ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.
- நேற்று நடந்த ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. மற்றொரு போட்டியில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.