உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரி படுகொலை குறித்து தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்யவில்லை என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை எற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் விவசாயிகள், பத்திர்கையாளர்கள், பொதுமக்கள் என எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  இந்த படுகொலை, தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றம் தானாக முன்வது வழக்கு பதிவு செய்ததாகவும், தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


ஆனால், தலைமை நீதிபதி என்.வி ரமணன் இதை மறுத்துள்ளார். சிவ் குமார் திரிபாதி, சிஎஸ் பாண்ட ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், உச்சநீதிமன்றம் தானாக முன்வது வழக்கு பதிவு செய்துள்ளதாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் என்.வி ரமணன் தெரிவித்தார்.  


இந்நிலையில், லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


"நீங்கள் யாருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளீர்கள்,  அவர்களை கைது செய்தீர்களா? இல்லையா? என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று தலைமை நீதிபதி என்.வி ரமணன் தெரிவித்தார்.    


இதற்கிடையே, லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபது பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவ் தலைமயிலான இந்த விசாரணைக் குழு, தனது அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



முன்னதாக, இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஷாஹீத் நச்சதர் சிங் இன் குடும்ப உறுப்பினர்களுக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி," பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் அமைச்சர் ராஜினாமா செய்யாதவரை மற்றும் அவரது மகன் கைது செய்யப்படாத வரை நீதி கிடைக்காது என்றும் கூறியுள்ளனர்" என கூறினார். மேலும்,  மக்களிடம் அரசுக்கு தார்மீகப் பொறுப்பு உள்ளது. அவரது மகன் நிரபராதி என்று அமைச்சர்  அஜய் மிஸ்ரா நினைத்தால், தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்துவிட்டு, தனது மகன் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டவுடன் மீண்டும் பதவியில் அமர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


 






 


பாஜக எம்பி வருண் காந்தியும் இந்த படுகொலை சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"வீடியோ தெளிவாக உள்ளது.படுகொலைகள் மூலம் போராட்டக்காரர்களை அமைதிபடுத்த முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் பழிவாங்கும் எண்ணங்கள் நுழைவதற்கு முன்பு சிந்தப்பட்ட அப்பாவி குடியானவர்களின் இரத்தத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டார்.