புதுச்சேரி அருகே தவளக்குப்பம் காவல் நிலையம் எதிரே அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர் திருடிச்சென்றார். புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த பூரணாங் குப்பத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 51). இவர் தவளக்குப்பம் காவல்  நிலையம் எதிரே கடலூர் புதுச்சேரி சாலையோரம் வாடகை பாத்திரக் கடை வைத்துள்ளார். அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள வீட்டில் அவர் வசித்து வருகிறார்.


Vellore: உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராமம்..காரணம் என்ன?


 




இந்த நிலையில்  வழக்கம் போல் கடையை திறக்க நாராயணன் வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் திருட்டு போயிருந்தன. இது போல் இவரது கடையை ஒட்டியுள்ள ஜூஸ் கடை, மளிகை கடை, பர்னிச்சர் கடை என அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து  திருடு நடந்திருப்பது தெரியவந்தது.




 


இது குறித்து தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து திருடியது பதிவாகி இருந்தது. அதனைக் கொண்டு அந்த மர்ம நபரை அடையாளம் கண்டு அவரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


 




 


Jayakumar: ஸ்டாலின், கனிமொழி ஏன் பிரசாரத்திற்கு போகல? ஜெயகுமார் சரமாரி கேள்வி


காவல் நிலையம் எதிரே அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த துணிகர திருட்டு சம்பவம் வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அரியாங்குப்பம் அடுத்தடுத்து கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு தவளக்குப்பம் திருட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ந்து இது போன்ற கடைகளில் பூட்டை உடைத்து திருடி வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளதால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Kanyakumari: தொடர் கனமழை...ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி