TN Corona Live Updates : தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. கண்ணீரிலும், பதற்றத்திலும் காத்திருக்கும் மக்கள்..

TN Corona Cases LIVE Updates: ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம்

ABP NADU Last Updated: 12 May 2021 08:38 PM
கண்ணீரிலும், பதற்றத்திலும் காத்திருக்கும் மக்கள்..

தமிழ்நாட்டில் தற்போது ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை,கோவை, திருச்சி,மதுரை,திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் தற்போது ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனை செய்யப்படும் அனைத்து இடங்களிலும் மக்கள் மருத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 

மருத்துவர், செவிலியர்-பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வரவேர்கத் தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்

மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஊதிய உயர்வும், காலம் சார்ந்த பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "


கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர்-பிற பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊக்கத்தொகை; உயிரிழந்த 43 மருத்துவப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.


மருத்துவத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; அவர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று நான்  அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது


கொரோனா போரில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் இழப்பீடு  பின்னர் ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டது தவறு.  அதையே தற்போதைய அரசும் வழங்காமல் ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்! 


மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஊதிய உயர்வும், காலம் சார்ந்த பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! " என்று தெரிவித்தார்.  


 

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன - ப.மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஏர்இந்தியா,இந்தியவிமானபடை விமானம் மூலம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கோரிக்கை வைத்தார்.  



இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில்," அனைத்து மாநிலங்களிலும்,நாடு முழுவதும் தினசரி  நாளுக்கு நாள் கொரோனா நோய் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது.  ஒவ்வொரு நாளும் 25000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோய் ஏற்படுகிறது.  மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 50,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறிப்பாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன, இதில் ஆக்ஸிஜன் தேவை தவிர்க்க முடியாதது. எனவே இந்த மாவட்டங்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கொள்கலன்களை வழங்குவதற்கான அவசர தேவை உள்ளது. எனவே, ஒடிசாவிலிருந்து இந்தியா விமானபடை / ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜனை விமானத்தில் கொண்டு வர  தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு  மதுரையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தலாம். இந்த விஷயத்தில் பிரதமர் அவர்கள் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.  

9 மாவட்டங்களில் தீவிர சிகிச்சைப் பிரவு படுக்கைகள் நிரம்பின

செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தர்மபுரி, கரூர், ராணிபேட், திருபத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் தீவிர சிகிச்சைப் பிரவு படுக்கைகள் நிரம்பின. சென்னை, அரியலூர், கோயம்பத்தூர், நீலகிரி, திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 10க்கும் குறைவான தீவிர சிகிச்சைப் பிரவு படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. 


ஏற்கனவே, சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோன இறப்பு எண்ணிக்கை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 71 நாட்களில் மட்டும் 192 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 71 நாட்களில் அதன் இறப்பு விகிதம் 1.3 விகிதமாக உள்ளது. இதே கால கட்டத்தில் சென்னையின் இறப்பு விகிதம் 0.7 ஆக உள்ளது.      

இந்தியா கொரோனா வைரஸ் நோய்த் தொற்று - முக்கியத் தககவல்கள்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. 4,205 பேர் கொரோன தொற்றுக்கு பலியாகியுள்ளனர். டெல்லி , மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. 


சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் இரண்டாவது நாளாக குறைவு: 


தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.   


 




கடந்த இரண்டு நாட்களாக, புது பாதிப்பைகள விட தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் , சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதைக் காண்பிக்கிறது. 


 


 






நன்றி: covid19indiaorg





 


இருப்பினும், நாட்டின் முக்கிய பெருநகரங்களில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின்  எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் அதிகருத்துள்ளது.       

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

தமிழகத்தில் லாரி உள்ளிட்ட  சரக்கு வாகனங்களுக்கு காலாண்டு வரி செலுத்துவதற்கு கால நீட்டிப்பு அளிக்க வேண்டும் என்றும், கொரோனா பாதிப்பினால் லாரி தொழிலுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.  

மத்திய சென்னையில் அதிகரிக்கும் கொரோனா

சென்னையின் மொத்த பாதிப்பில், 56 சதவிகித கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு,  20 வயது முதல் 50 வயதுகுட்பட்ட வர்களிடம் கண்டறிப்பட்டுள்ளது. 9 வயதுக்குப் பட்ட குழந்தைகளின் பாதிப்பு 2.34 சதவிகிதமாக உள்ளது.       




 


11.05.2021 அன்று , தேனாம்பேட்டை மண்டலல்த்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தெருக்களில் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கம், வலசரவாக்கம் ஆகிய மண்டலங்களில்  முறையே 250, 200 தெருக்களில் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. வட சென்னை மற்றும் தென் சென்னையில் கொரோனா சமூகப் பரவல் சற்று குறைந்து கொண்டு வருகிறது.           

மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்

மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

பரிசோதனை முடிவுகள் சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறையிடம் வழங்க முடிவு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மண்டல கள ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 


அதன் கீழ்,  


தொற்று பரிசோதனை(RT-PCR)செய்யும் நபர்களுக்கு சோதனை முடிவு வருவதற்கு முன்பாகவே ஜிங்க், விட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், மூன்றடுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படும்.


கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கான முடிவுகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், பரிசோதனை மேற்கொண்ட நபர்களின் முடிவுகளை சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறையிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கொரோனா பரிசோதனை முடிவுகளை பெற ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி மருத்துவக் குழுவின் வாயிலாக மட்டுமே முடிவுகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்படும்.


 

சென்னை மண்டல வாரியாக கொரோனா பரவல் விவரம்



 


 

உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு

கொரோனா சிகிச்சை பணியில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு வித்த்ரவிட்டது, இதனையடுத்து,  கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  

நர்ஸிங் மாணவர்களை சிறப்பு ஊதியம் தந்து பணியமர்த்த வேண்டும் - ரவிக்குமார் எம்.பி

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் நர்ஸிங் இறுதியாண்டு பயிலும் மாணவர்களை 100 நாட்களுக்கு சிறப்பு ஊதியம் தந்து பணியமர்த்தவும், அவர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி செய்துதரவும் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 03.05.2021 அன்று அனுமதியளித்துள்ளது.


அதன்படி நர்ஸிங் மாணவர்களை சிறப்பு ஊதியம் தந்து பணியமர்த்த நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு வழிகாட்டுமாறு முதல்வர் மு.க ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்தார்.  

முன்னாள் சிபிஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன் உயிரிழந்தார்

கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த  முன்னாள் சிபிஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன் உயிரிழந்தார். அவருக்கு வயது  71 . முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

தினசரி 9000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி

இந்தியாவில் தினசரி ஆக்சிஜன் உற்பத்தி தற்போது 9000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்தண்டு அகஸ்ட் மாதம் தினசரி உற்பத்தி 5700 மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.      


 


 


34 மாவட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் அதிகம்

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. அதாவது, இந்த 34 மாவட்டங்களில் 100   பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் குறைந்தது 10 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது.      


 


இந்த விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும். எனவே, தமிழகத்தில் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் அதிகரித்திருப்பதன் மூலம் இரண்டு முக்கிய விஷயங்களை புரிந்துகொள்ளலாம். முதலாவதாக, சமூக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இரண்டாவதாக, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அநேக சென்னைவாசிகள் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.


 

18 வயது முதல் 44 வயது வரையிலான பயனாளிகள் தமிழகத்தில் மிகக் குறைவு

நாடுமுழுவதும், இதுவரை 18 வயது முதல் 44 வயது வரையிலான பயனாளிகளில் 30,39,287 (30 லட்சம்) பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 


டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் வெறும் 19,979 (18 - 44) பயனாளிகள் மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.          



  


கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், 18 வயது முதல் 44 வயது வரையிலான புதிய பயனாளிகள் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் பதிவு செய்யத் துவங்கினர். கொவின் (cowin.gov.in) இணையதளத்திலோ, ஆரோக்கிய சேது செயலி வாயிலாகவோ, நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

முதலமைச்சர் தவறாக வழிநடத்தப்படுகிறார்- கோவாக சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த மரணங்கள் குறித்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தர்போது கோரிக்கை வைத்தார். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த அவர், முதலமைச்சர் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும் தெரிவித்தார்.    

நடிகர் மணிமாறன் கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தார்

சார்பட்டா பரம்பரை, கில்லி, வேட்டைக்காரன், ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகரும், மேடை நாடக கலைஞரும், ஸ்டண்ட் கலைஞருமான "மாறன்" எ. "மணிமாறன்" கொரோனா பெருந்தொற்று காரணமாக இன்று காலை உயிர் இழந்தார்.

கொரோனா நோயாளிகளை அச்சுறுத்தும் மியூகோர்மைகோசிஸ் நோய்?

மியூகோர்மைகோசிஸ் என்பது பூஞ்சையால் ஏற்படும் நோய்த் தொற்றாகும். கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களிடம் இந்த வகையாக பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த நோய் சிலருக்கு பாரவைக் குறைபாடுகளை எற்படுத்தியிருகிறது.  


மியூகோர்மைகோசிஸ் என்பது பூஞ்சை தொற்று (fungal Infection): மருத்துவ காரணங்களுக்காக   (உதரணாமாக, கொரோன சிகிச்சை) அதிகப்படியான சிகிச்சைக்கு (ஸ்டீராய்டு) உட்படுத்தப்படும் நபர்  சுற்றுபுறத்தில் உள்ள நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை இழக்கிறார்.  சில சிகிச்சைகள் மனித உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை குறைக்கும். அப்போது, சுற்றுப்புறத்தில் எங்கும் நிறைந்திருக்கும்  பூஞ்சைகள் மனிதர்களை  தாக்க ஆரம்பிக்கின்றன. 


மகராஷ்டிரா மாநிலத்தில் இந்த மியூகோர்மைகோசிஸ் நோய்த் தாக்குதலால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.    



பயனாளிகள் இரண்டாம் டோஸ் பெறுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்

முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்ட அனைத்து பயனாளிகளும் முன்னுரிமை அடிப்படையில் இரண்டாம் டோஸ் பெறுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறித்தியது.  இந்திய அரசு மூலம் பெறப்படும் 70 சதவிகித இலவச தடுப்பூசிகளை இரண்டாம் டோஸ்களுக்கு மட்டும் ஒதுக்க வேண்டும். மாநிலங்கள் விருப்பப்பட்டால் 100 சதவிகிதம் வரை கூட ஒத்துக்கலாம் என்றும் தெரிவித்தது. 


 



           

பஞ்சாயத்து பிரதிநிதிகள், ஆஷா பணியாளர்களை முன்கள தன்னார்வலர்களாக ஈடுபடுத்துங்கள்- மத்திய அமைச்சகம் கடிதம்

கிராமப்புறங்களில் கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.  


மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மருத்துவர்கள், மருத்துவமனை  வழங்கியுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி கிராமப்புற மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொரோனா பெருந்தோற்று தொடர்பான தவறான கருத்துக்களை நீக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள், ஆசிரியர்கள், ஆஷா பணியாளர்கள் போன்றோருக்கு விரல்களில் பயன்படுத்தும் ஆக்சி மீட்டர்கள், என்-95 முகக் கவசங்கள், உடல் வெப்ப பரிசோதனைக் கருவிகள், கிருமிநாசினிகள் முதலிய பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு முன்கள தன்னார்வலர்களாக அவர்களை இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

2 மாதங்களுக்குப் பிறகு ஆறுதல் தரும் செய்தி- Active Cases குறையத் தொடங்கியது

2 மாதங்களுக்குப் பிறகு (64 நாட்கள்), நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் தினசரி எண்ணக்கை  குறைந்தது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  


நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 37,15,221 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 16.16% ஆகும்.


கடந்த 24 மணி நேரத்தில் 3,56,082 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.  3,29,942 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் குணமடைந்தோர் வீதம் 82.75% ஆக அதிகரித்துள்ளது


 




 

டாசிலிசுமாப் மருந்து ஒதுக்கீடு விவரம்

கூடுதலாக 45000 டாசிலிசுமாப் குப்பிகள் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு  பகிர்ந்து அளிக்கப்பட்டதாக மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் 9900 குப்பிகளை அரசு வழங்கியது.


இந்த 2 ஒதுக்கீட்டைத் தவிர, மாநிலங்களுக்கு மேலும் 50024 டாசிலிசுமாப் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


 


தமிழகத்துக்கு 1640 டாசிலிசுமாப் குப்பிகளும், புதுவைக்கு 155 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதே போல் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

Background

Corona Virus Latest News in Tamil: முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. மேலும், அனைத்துத் தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.


ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 




 


தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 298  பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 29,272 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,62,181  ஆக அதிகரித்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.