பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கடந்த மாதம் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து உணவுத்திருவிழா நடத்தினர். இந்த உணவுத்திருவிழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார்.
அந்த நிகழ்ச்சி சிறப்புர முடிவுற்றதையடுத்து, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், 2,136 மகளிருக்கு ரூ. 15.71 கோடி வங்கிக்கடன் இணைப்புகளையும், உணவுத்திருவிழாவின் வெற்றிக்கு செயலாற்றிய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதியிடம் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படுமா என கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதுப்பற்றி எனக்கு தெரியாது. முதலமைச்சர் தான் முடிவெடிக்க வேண்டும்” எனக் கூறிச் சென்றார்.
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் “சமையல் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு குடும்பத்தில் இருப்பவர்களை திருப்தி படுத்துவதே மிகப்பெரிய விஷயம். ஆனால் கிட்டத்தை ஒரு லட்சம் குடும்பத்திற்கு சமைத்துள்ளீர்கள். 5 நாட்களும் அவ்வளவு கூட்டம் வந்திருந்தது. மெரினாவுக்கு வரும் கடல் அலையைவிட உணவுத்திருவிழாவிற்கு வரும் மக்கள் தலையே அதிகமாக இருந்தது.
5 தினங்கள் மட்டுமே உணவுத்திருவிழா நடந்தது. இதில் ரூ.1 கோடியே 55 லட்சம் அளவுக்கு உணவுப்பொருட்களை மக்கள் வாங்கி சுவைத்துள்ளனர். இந்த உணவுத்திருவிழா பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உங்களின் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி.
மகளிரை உள்ளடிக்கிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முக்கியமான இடத்தில் உள்ளது. அதனால்தான் மகளிருக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் உணவுத்திருவிழாவை இன்னும் பெரிதாக நடத்த வேண்டும். அதிக கடைகளோடு, இன்னும் பிரமாண்டமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற டோக்கன் சிஸ்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று முதல் ரேஷன் கடைகள் டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரத்தை பின்பற்றி பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம். சென்னை சைதாப்பேட்டையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 இடம்பெறவில்லை. இந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணத்தால் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்படவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.