பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி அமைப்பு வெளியிட்டுள்ள புதிய விதிகளால் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 


பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரங்களில் ஏற்கெனவே ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் போட்டா போட்டி நிலவி வருகிறது. இந்த நேரத்தில் யுஜிசி வெளியிட்டிருக்கும் புதிய விதிகள் தமிழகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பல்கலை துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதில், பல்கலை துணை வேந்தர் தேர்தல் குழுவை ஆளுநரே முடிவு செய்வார் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது நியமன தேர்தல் குழு தலைவராக ஆளுநரும், உறுப்பினர்களாக யுஜிசி பரிந்துரைக்கும் நபரும் பல்கலைக்கழக உறுப்பினர் பரித்துரைப்பவரும் இருப்பார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. 


இதனால் தமிழக அரசின் அங்கீகாரம் பிடுங்கி எறியப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த புதிய விதிகள் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஆளுநர்களுக்கு துணைவேந்தர் நியமனங்கள் மீது பரந்த கட்டுப்பாட்டை வழங்கும் புதிய யுஜிசி விதிமுறைகள் மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மத்திய பாஜக அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை, அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மதிப்பை குறைக்கவும் முயல்கிறது.






கல்வி என்பது கட்டளைகளுக்கு இணங்கும் ஆளுநர்கள் வசம் இல்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கைவசம் இருக்க வேண்டும். சிறந்த உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டு நாட்டிலேயே முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, நமது கல்வி நிறுவனங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது.


 
கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. யுஜிசி அறிவிப்பை ஒருதலைபட்சமாக வெளியிடுவது அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த அத்துமீறலை ஏற்க முடியாது. சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழக அரசு போராடும்” எனத் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார். அதில் யுஜிசியின் புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்த உள்ளார். இதைத்தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு உறுப்பினர்கள் பேசிய பிறகு ஒரு மனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.