மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்களது கம்பெனியின் செயல் திறனை அதிகரிக்க சில ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தொழில்நுட்ப துறையை பணிநீக்கம் என்ற வார்த்தை 2023ஆம் ஆண்டில் இருந்து  துரத்தி வருகிறது. உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல. 2025ஆம் ஆண்டிலும் பணிநீக்கம் தொடருகிறது. 


பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ, இந்த வாரம் இந்தியாவின் 3 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். 


இந்த அறிவிப்பை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்களது உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் பணியாளர்களில் சிலரை பணிநீக்கம் செய்ய தொடங்கியுள்ளது. சரியாக பணி செய்யாத ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவே இத்தகைய நடவடிக்கை என சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 


மேலும், பணிநீக்கம் தொடர்பாக பேசிய மைக்ரோசாஃப்ட் செய்தி தொடர்பாளர் “வேலை நிறுத்தம் தொடர்கிறது. நிறுவனம் தொடர்ந்து ஊழியர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்” எனத் தெரிவித்தார். 


2,28,000 ஊழியர்களை கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தொடரும் பணிநீக்கம் மூலம் எத்தனை பேர் வேலையை இழக்க வேண்டி வரும் என துல்லியமான தகவல் தெரியவில்லை. இதன் மூலம் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. பெரும்பாலும் ஒரு சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 


மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் கடந்த 2023ஆம் ஆண்டில் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது மொத்த சதவீதத்தில் 5 சதவீத ம் ஆகும். இதைத்தொடர்ந்து எக்ஸ்பாக்ஸ் கேமிங் பிரிவும் பணிநீக்கத்தில் இறங்கியது. 2024ஆம் ஆண்டில் முதல் தவணையாக 1500 பேரையும் அடுத்த தவணையாக 1000 பேரையும் பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அசூர் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவும் பணிநீக்கத்தை அப்போது அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 


இதையடுத்து தற்போது மீண்டும் பணிநீக்கத்தில் இறங்கியுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அடுத்தடுத்து தொடரும் பணி நீக்கத்தால் ஐ.டி ஊழியர்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.