Rajasthan CM: இதுதான் எம்.எல்.ஏ.வா பர்ஸ்ட் டைம்! பஜன்லால் சர்மாவுக்கு அடித்த 'முதலமைச்சர்' ஜாக்பாட்! யார் இவர்?

முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பஜன்லால் சர்மா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Continues below advertisement

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் முக்கியமான மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. இதில் மக்களவைத் தேர்தலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக கருதப்படுபவை ராஜஸ்தானும், மத்திய பிரதேசமும் ஆகும்.

Continues below advertisement

முதன்முறை எம்.எல்.ஏ.:

மத்திய பிரதேச மாநிலத்திற்கு மோகன் யாதவை முதலமைச்சராக அறிவித்த பா.ஜ.க. தலைமையிடம், ராஜஸ்தானுக்கு பஜன்லால் சர்மாவை முதலமைச்சராக தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தானின் முதலமைச்சராக தேர்வாகியுள்ள பஜன்லால் சர்மா, சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும்,

முதன்முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற பஜன்லால் சர்மாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது, அவரது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ.வாக முதன்முறை இவர் வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளராக 4 முறை பதவி வகித்துள்ளார்.

சொத்து மதிப்பு:

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சங்கநேர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை விட 48 ஆயிரத்து 081 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 56 வயதான பஜன்லால் சர்மா தன்னுடைய சொத்து மதிப்பாக ரூபாய் 1.5 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் 43.6 லட்சம்  அசையும் சொத்துக்களாகவும், 1 கோடி அசையா சொத்துக்களாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பஜன்லால் சர்மா பா.ஜ.க.வின் ஏபிவிபி-யில் தீவிரமாக பணியாற்றியவர். நீண்ட காலமாக பா.ஜ.க.விற்காக பணியாற்றி வந்த இவர் இந்த முறைதான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். இவர் மட்டுமின்றி அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக தியாகுமரி மற்றும் பிரேம் சந்த் பைரவா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூத்த தலைவர்களுக்கு கல்தா:

ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அனுபவமிக்க மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜே, அர்ஜூன் மேவால், தியாகுமாரி, ஜோஷி, கஜேந்திரசிங் ஷெகாவத் உள்பட அனைவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பஜன்லால் சர்மா தேசிய பா.ஜ.க. தலைவரான ஜே.பி. நட்டாவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டவர்கள் யாருமே முதலமைச்சராக தேர்வு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Rajasthan CM: ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு..!

மேலும் படிக்க: Telangana Politics: ஆரம்பமே அதிரடி..! முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த விவகாரம்: தெலங்கானா டிஜிபியின் சஸ்பெண்ட் ரத்து

 

Continues below advertisement