Rahul Gandhi: உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு வரலாற்றை மாற்றி எழுத மட்டுமே தெரியும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


அமித்ஷா மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு:


நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் பணம் யார் பெறுகிறார்கள்? ஆகியவை தான் அடிப்படைப் பிரச்சினை.  அவர்கள் இந்த பிரச்சினையை விவாதிக்க விரும்பவில்லை. இதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள். நாங்கள் இந்த பிரச்சினையை முன்னெடுத்துச் செல்வோம். ஏழைகள் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்வோம்.


சத்தீஸ்கரில் காங்கிரஸ் சார்பில் இருந்த முதலமைச்சர் கூட ஓபிசியைச் சேர்ந்தவர்.  அவர்களும் ஓபிசியை சேர்ந்த நபரை முதலமைச்சராக அறிவித்துள்ளனர்.  ஆனால் அவர்களில் எத்தனை சதவீதம் பேர் அரசின் கட்டமைப்பில் உள்ளனர் என்பதே கேள்வி? பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், அரசாங்கத்தை வழிநடத்தி செலூம் 90 பேரில் 3 பேர் மட்டுமே OBC யைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.


என் கேள்வி அரசின் அமைப்பில் OBC, தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் பங்கேற்பு பற்றியது. ஆனால் அதை விடுத்துவிட்டு அவர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் பிறரைப் பற்றி பேசுகிறார்கள். நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார். அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரியும் என்று எதிர்பார்க்க முடியாது, அவர் அதை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.






அமித்ஷா சொன்னது என்ன?


ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார். அதன்படி, நேரு போர் நிறுத்தம் செய்யாமல் இருந்திருந்தால், இன்று காஷ்மீர் முழுவதும் நமதாக இருந்திருக்கும். ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்கு முன்னாள் பிரதமர் நேருதான் காரணம்” என்று அமித்ஷா கூறினார். இதற்கு பதிலளித்தபோது தான், அமித் ஷாவிற்கு வரலாறு தெரியாது, வரலாற்றை மாற்றி எழுதவே தெரியும்” என ராகுல் காந்தி பேசினார்.