Rajasthan CM:  ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்ற இழுபறி 10 நாட்களாக நீடித்து வந்த நிலையில் தற்போது புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 


 

அண்மையில் மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் கரன்பூர் தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 199 தொகுதிகளில் கடந்த நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைஒஎற்ரது. கரன்பூர் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால் தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது. 

 

நடந்து முடிந்த வாக்குப்பதிவின் எண்ணிக்கை கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டது. அதில், மாநிலத்தில் ஆட்சி அமைக்க 101 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், பாஜக கட்சி 115 இடங்களில் வென்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் முடிவுகளில் பாஜக வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் யாரு அடுத்த முதலமைச்சர் என்பதில் குளறுபடி ஏற்பட்டது. 

 

கடந்த 10 நாட்களாக ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்வதில் என்பதில் இழுபறி நீடித்ததால் ஆட்சி அமைப்பது தள்ளிப்போனது. முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மகந்த பாலக்நாத் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். 

 

இந்த சூழலில் இன்று ஜெய்ப்பூரில் பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, பாஜக பொதுசெயலாளர் வினோத் தாவ்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் அனைவரின் முன்னிலையிலும் ஒரு மனதாக ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். தற்போது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பஜன்லால் சர்மா மாநிலத்தின் பாஜக பொதுச்செயலாராக இருந்துள்ளார். இவர் சட்டமன்ற தேர்தலில் சங்கனேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். 

 

ஏற்கெனவே ராஜஸ்தானின் முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே இந்த முறை முதல்வராக வேண்டும் என்ற முயற்சியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வரை பேசினார். ஆனால், எதிர்பாராத திருப்பமாக பஜன்லால் சர்மா முதலமைச்சராக தேர்வாகியுள்ளார்.