Telangana Politics: தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் சஸ்பெண்ட் உத்தரவை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.


தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி


தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் நவம்பர் 30ம் தேதி பதிவான வாக்குகள், கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையிலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இதையடுத்து, ஏராளமான அரசு அதிகாரிகள் காங்கிரஸ் மாநில தலைவரான ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமாரும், ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


சஸ்பெண்ட் உத்தரவும், ரத்தும்:


அதேநேரம், வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போதே ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தன் மூலம், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்த விவகாரத்தில் டிஜிபி அஞ்சனி குமாரின்  மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் பணியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தெலங்கானா சட்டமன்ற தேர்தல்:


119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி களம் கண்டது. ஆனால், அந்த கனவை கலைத்த காங்கிரஸ் கட்சி, 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைத்தது. இதையடுத்து நீண்ட இழுபறிக்கு ரேவந்த் ரெட்டியை முதலமைச்சராக தேர்வு செய்து காங்கிரஸ் அறிவித்தது. இதையடுத்து, சந்திரசேகர ராவிற்கு அடுத்தபடியாக தெலங்கானாவின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற இரண்டாவது நபர் என்ற பெருமையை ரேவந்த் ரெட்டி பெற்றார்.


மாற்றம் காணும் அரசு இயந்திரம்?


பொதுவாக ஒரு கட்சி வெற்றி பெற்று புதியதாக ஆட்சி அமைத்தால், அங்குள்ள தலைமை செயலாளர் தொடங்கி டிஜிபி வரையிலான அரசு இயந்திரத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் மாற்றப்படுவர். தங்களுக்கு ஏற்றபடியான, தங்களது இசைவுகளை புரிந்துகொண்டு செயல்படும் நபர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும். அந்த வகையில் தற்போது தான் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி கட்டிலில் ஏறியுள்ளது. இதையடுத்து மாநில அரசு இயந்திரத்தின் பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு புதிய நபர்கள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், டிஜிபி அஞ்சனி குமாரின் இடத்திற்கும் வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.