பிரதமர் மோடிக்கு எதிராகவும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தி, அதானி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல, லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.


லண்டனில் ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்திக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முடக்கினர். இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடிக்க கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்தது.


அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இச்சூழலில், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.


ஜாமீன் நீட்டிப்பு:


அதேபோல, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட ஜாமீனும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி வரை, ராகுல் காந்தியின் பிணையை நீட்டித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டு தண்டனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


அதேபோல, அவதூறு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை மே 3ஆம் தேதி நடைபெறும் என சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


சத்தியமே என் ஆயுதம்:


சூரத் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல் காந்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். "இது ஜனநாயகத்தை காப்பாற்ற, மித்ரகலுக்கு (குரோனி முதலாளித்துவ தொழிலாளர்களுக்கு உதவும் மத்திய அரசு) எதிரான போராட்டம். இந்தப் போராட்டத்தில் சத்தியமே என் ஆயுதம், சத்தியமே என் அடைக்கலம்" என பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, மேல்முறையீடு செய்வதற்காக சூரத் நீதிமன்றத்திற்கு ராகுல் காந்தி நேரில் சென்றார். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் நீதிமன்றத்திற்கு சென்றனர்.


இதனால், நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பு ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ராகுல் காந்தி, நீதிமன்றத்திற்கு சென்றதை பாஜக கடுமையாக விமர்சித்திருந்தது. நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி நீதிமன்றம் சென்றதாக பாஜக சாடியது.


மேலும் படிக்க: CSK vs LSG, IPL 2023 1st Innings: 218 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்த சென்னை; எட்டிப் பிடிக்குமா லக்னோ..!