உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் கவனிக்கப்படும் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியும் ஒன்று. கடந்த மார்ச் மாத இறுதியில் இதன் 16வது சீசன் மிக கோலாகலமாக தொடங்கப்பட்டது. அதில் சென்னை லக்னோ அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன் படி பேட்டிங்கைத் தொடங்கிய சென்னையின் தொடக்க ஜோடியான ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக ருத்ராஜ் வானவேடிக்கை காட்டினார். இவர்களின் பாட்னர்ஷிப்பை உடைக்க லக்னோ எவ்வளவோ முயன்றும் உடனடி பலன் கிடைக்கவில்லை.
அதிரடியாக ஆடிவந்த அந்த ஜோடி 5 ஓவர்களில் 60 ரன்கள் குவித்தது. லக்னோவின் பந்து வீச்சை சிதைத்த சென்னையின் தொடக்க ஜோடி 8 ஓவர்களில் 101 ரன்கள் குவித்து மிரட்டி வந்தது. ஒருவிக்கெட்டுக்காக போராடி வந்த லக்னோ அணிக்கு ரவி பிஷ்னாய் விக்கெட் எடுத்து கொடுத்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ருத்ராஜ் அணியின் ஸ்கோர் 10வது ஓவரின் தொடக்கத்தில் 110 ரன்களாக இருந்த போது தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரில் கான்வேவும் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக சென்னையின் ரன் வேட்டை மந்தமானது.
அதன் பின்னர் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷிவம் துபே ரவி பிஷ்னாயிடம் தனது விக்கெட்டை இழந்தார். அதில் ஒரு சிக்ஸர் 102 மீட்டர்களுக்கு பறக்கவிட்டார் துபே. விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் சென்னை அணி ரன் வேட்டையை மட்டும் நிறுத்த வில்லை. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் களமிறங்கி மூன்று பந்துகளை எதிர்கொண்ட தோனி அடுத்ததடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். லக்னோ அணி சார்பில் ரவி பிஷ்னாய் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.