ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 27 பேரையும் ஜூன் 30ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால்சாமி கோவில் தெருவில் வசித்து வந்த நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி இரவு, தனது வீட்டு அருகே நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியது. அதில் டெலிவரி ஊழியர்கள் போல் வந்த கும்பல் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி விட்டு 3 இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியது.

Continues below advertisement

இந்த வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு:

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் ஏற்கனவே வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகேந்திரன், அசுவத்தாமன் உள்ளிட்ட 27 பேர் சிறையில் இருந்தவாறு காணொலி மூலம் ஆஜராகி இருந்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இன்று மேலும் சிலர் மனுத்தாக்கல் செய்தனர். மேலும், சிலர் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து அனுமதியளித்து கால அவகாசம் வழங்கிய நீதிபதி, அடுத்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 30 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இதையும் படிக்க: பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?