மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மதுரை கிழக்கு தொகுதி அதிமுக கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் - ராஜன் செல்லப்பா பேச்சு.

மதுரை கிழக்கு தொகுதியில் போட்டி
 
மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்றது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். இதில் ராஜன் செல்லப்பா பேசியதாவது..,” இன்றைக்கு ஸ்டாலின் மக்கள் மீது கவனம் செலுத்தவில்லை. மக்களுக்கு மட்டுமல்லாது இன்றைக்கு காவல்துறை உயிருக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைக்கு வன்முறை கலாச்சாரமாக, துப்பாக்கி கலாச்சாரமாக மாறிவிட்டது. இன்றைக்கு தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் வயதான தம்பதி கூட பாதுகாப்பு இல்லாமல் இரட்டை கொலை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டார். அதேபோன்று பகுஜன் கட்சியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று வரை நாம் 200 தொகுதியில் வரை வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்து தற்போது திமுக ஆட்சியில்  தொடர்ச்சியாக நடைபெறும் அவல நிலையால், 234 தொகுதிகளில நாம் வெற்றி பெறுவோம், என்ற நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக மதுரை கிழக்கு தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு போட்டியிட அதிகமான கழகத்தினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
 
கல்வித் துறையை படுமோசமாக உள்ளது 
 
 இன்றைக்கு திமுகவை வீழ்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் அம்மா ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கினோம். குறிப்பாக ஒரு பவுன் தங்கம் ஒரு லட்ச ரூபாய் விற்றால் கூட அதை நாங்கள் மக்களுக்கு வழங்கும் என்று  எடப்பாடியார்  கூறினார். அந்த திட்டத்தை நிறுத்திவிட்டார், அதேபோன்று பெண்களுக்கான இரண்டு சக்கர வாகன திட்டம், மடிகணினி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டனர். மக்களுக்கு தேடி மருத்துவம் திட்டமும் மக்களுக்கு எந்த பலனும் தரவில்லை. ஆனால் தவறான புள்ளி விபரங்களை கணக்கு காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். கல்வி துறையை எடுத்துக் கொண்டால் அது படுமோசமாக உள்ளது.
 
மதுரை கிழக்கு தொகுதி அதிமுக கோட்டை
 
இன்றைக்கு திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் எல்லாம் திமுக மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் உள்ளுக்குள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றைக்கு திமுக கூட்டணி பலவீனமான கூட்டணியாக உள்ளது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் மூன்று தொகுதியில் உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதி, திருப்பரங்குன்றம் தொகுதியில் நாம் வென்றோம். தற்போது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதி சேர்த்து மூன்று தொகுதி நாம் வெல்லுவோம். இந்த கிழக்கு தொகுதியில்  வருகின்ற தேர்தலில் அதிகார பலம் பண பலம் எதை வைத்தாலும் மக்கள் ஒருபோதும் மனது வைக்க மாட்டார்கள். மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மதுரை கிழக்கு தொகுதி அதிமுக கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்” என கூறினார்.