புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. பதவியை அதிமுகவுக்கு வழங்குமாறு முதல்வர் ரங்கசாமியிடம் அதிமுக கிழக்கு மாநிலச் செயலர் அன்பழகன் வலியுறுத்தி கடிதம் தந்துள்ளார்.  புதுச்சேரி மேலவை எம்.பி.யின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு அக்டோபர் 4ஆம்தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 22 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெற ஆளும் என்.ஆர்.காங்கிரஸிடம் பாஜக கோரியுள்ளது. தற்போது இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுகவும் இப்பதவியைத் தரக் கோரியுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் இக்கூட்டணியில் இடம் பெற்று இருந்த அதிமுக ஒரு இடத்திலும் வெல்லவில்லை.


இந்நிலையில் புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியிடம் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 



நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டோம். 4 சட்டப் பேரவை உறுப்பினர்களோடு, சுமார் 18 சதவீத வாக்கு தகுதியில் இருந்த அதிமுகவிற்கு குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையிலும், பல்வேறு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நம் கூட்டணியை அதிமுக உறுதி செய்தது. தாங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நியமனம் செய்யப்பட்ட 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களில் அதிமுகவிற்கு இடம் அளிக்கவில்லை.


கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் நம் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை நாம் பெற்றுள்ளோம். தற்போது புதுச்சேரியில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கோகுலகிருஷ்ணன் பதவி காலம் முடிவடைந்து, அப்பதவிக்குத் தேர்தலும் நடைபெறவுள்ளது.


 


உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் கூட்டணிக்கு பை பை சொன்ன அதிமுக: செங்கல்பட்டில் ஆறுதல்!


சட்டப் பேரவையில் அதிமுகவிற்கு பிரதிநிதித்துவம் இல்லாத சூழ்நிலையில் ஏற்கெனவே அதிமுக சார்பில் இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவிற்கு வழங்க தாங்கள் உரிய வழிவகை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரும், முதல்வருமான நீங்கள், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக, கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதிமுகவிற்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை மனமுவந்து வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் ஓட்டலில் நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கான ராஜ்யசபா எம்.பி பதவியை பாஜகவிற்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அத்தீர்மானம் முதலமைச்சர் என்.ரங்கசாமிக்கு வழங்கப்பட்டது குறிப்பித்தக்கது.


 


AIADMK Candidates List: உள்ளாட்சி வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக... கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு!