குஜராத்தில் பிரதமர் மோடி:


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.


அந்த வகையில், இன்று தனது சொந்த மாநிலமான  குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர்  மோடி இன்று திறந்து வைத்தார். 


ஓகா- பெய்ட் துவாரகா சிக்னேச்சர் பாலம் என்றும் அழைக்கப்படும் சுதர்சன் சேது, சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம்,  புகழ்பெற்ற துவாரகதீஷ் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது பார்க்கப்படுகிறது.


துவாரகையில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி:


சுதர்சன் சேது பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி,  துவாரகை நகரத்தில் நீருக்கு அடியில் பூஜை செய்து வழிபாடு செய்தார். பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து,  நீருக்கு அடியில் சென்று வழிபாடு செய்துள்ளார். அங்கு, கிருஷ்ணருக்கு அடையாளமாக இருக்கும் மயில் இறங்குகளை காணிக்கையாகச் செலுத்தினார். காவி நிற உடை அணிந்து நீருக்கு அடியில் சென்று அவர் பூஜை செய்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 






 இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "நீரில் மூழ்கியிருக்கும் துவாரகை நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. ஆன்மிக மகிமை மற்றும் பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்” என்று பதிவிட்டிருந்தார். 


இந்தியாவில் உள்ள மிக புனிதமான நகரங்களில் ஒன்று துவாரகை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்ந்து, ஆட்சி செய்ததாக சொல்லப்படும் நகரம். இந்த நகரம் கிட்டதட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக சொல்லப்படுகிறது.  கிருஷ்ணர் துவாரகையில் இருந்து வெளியேறியதும் அந்த நகரமே கடலில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. துவாரகை நகரில் துவாராகாதீஷ் எனப்படும் கோயில் கோமதி நதியின் கரையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


PM Modi Chennai Visit: மக்களவைத் தேர்தல் - தமிழகத்தை குறிவைக்கும் பாஜக - மார்ச் 4 பிரதமர் மோடி சென்னை வருகிறார்..!


Perambalur Lok Sabha constituency: பெரம்பலூர் மக்களவைத் தொகுதி - யாருக்கு சாதகம்? பாரிவேந்தர் எம்.பி., பாஸ் ஆனாரா?