PM Modi Chennai Visit: பிரதமர் மோடி மார்ச் 4ம் தேதி சென்னைக்கு வந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.


பிரதமர் மோடி சென்னை வருகை:


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் தமிழகத்தை குறிவத்து தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக,  மார்ச் 4ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சென்னையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அதே நேரத்தில் அன்றைய தினம் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பரப்புரை கூட்டத்தை நடத்த தமிழக பாஜவினர் திட்டமிட்டுள்ளனர்.


பிரமாண்ட பரப்புரை கூட்டம்:


பரப்புரை கூட்டத்தை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடல் அல்லது பல்லாவரம்  பகுதியில் நடத்த பாஜவினர் திட்டமிட்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு இடம் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை அறிமுகப்படுத்துவதோடு, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைதொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தமிழகத்தை குறிவைக்கும் பாஜக:


முன்னதாக இந்த மாத இறுதியிலேயே இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்திலேயே திருச்சி பாரதிதாசன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பது என இரண்டு முறை தமிழகம் வந்து சென்றார். இந்நிலையில் அடுத்த ஒரு வார கால இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை, பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். இதன் மூலம், வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் ஆழமாக கால்பதிக்க பாஜக தீவிரம் காட்டுவதை உணர முடிகிறது. அதோடு, தமிழகத்திலிருந்து மக்களவைக்கு பாஜக சார்பில் உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதிலும் தீர்க்கமாக இருக்கிறது. இதற்கு, பிரதமர் மோடியின் அடுத்தடுத்த தமிழக பயணங்கள் பெரிதும் உதவும் என, பாஜக மாந்ல தலைமை நம்புகிறது.


பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்: 



  • 27ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்

  • பிற்பகல் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர் மோடி

  • 2.45 முதல், 3.45 வரை அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி

  • 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து சூலூர் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்.

  • 5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்

  • 6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார் பிரதமர்

  • அன்றைய தினம் அரசியல் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.


28ம் தேதி பிரதமரின் பயண திட்டம்:



  • காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்

  • 8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார் பிரதமர் மோடி

  • 9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்

  • 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு  திருநெல்வேலி செல்கிறார்

  • 11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்று தனது தமிழக பயணத்தை முடிக்கிறார்

  • 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி