Perambalur Lok Sabha Constituency Details in Tamil: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை தொடர்ந்து அலசி வருகிறோம். அந்த வகையில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உருவான வரலாறு:
தமிழ்நாட்டின் 25வது மக்களவைத் தொகுதியான பெரம்பலூரில் கடந்த 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. முன்னதாக பெரம்பலூர், உப்பிலியாபுரம், வரகூர், அரியலூர், ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, பெரம்பலூர் தொகுதியில் இருந்த ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி மக்களவைத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. கரூர் மக்களவைத் தொகுதியில் இருந்த குளித்தலை,பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. தனி தொகுதியில் இருந்து பொதுத் தொகுதியாகவும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது, குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) மற்றும் பெரம்பலூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் உள்ளன.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எப்படி?
பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட வாலீஸ்வரர் கோயில், ஆங்கிலேயர்கள் - பிரெஞ்சு படையினர் இடையேயான வாலிகண்டா போர் நடைபெற்ற ரஞ்சன்குடிகோட்டை ஆகியவை பெரம்பலூரின் வரலாற்றுச் சின்னங்களாக உள்ளன. முத்தரையர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள இந்த தொகுதியில், ஆதிதிராவிடர்கள் ரெட்டியார் மற்றும் உடையார் சமூகத்தினரும் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த தொகுதியில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம் உற்பத்தி முதன்மையானதாக உள்ளன. வாழை, கரும்பு, பருத்தி, நெல் ஆகிய பயிர்களும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன.போதிய லாபம் இல்லாததால் விவசாயத் தொழிலை விட்டு வேலை தேடி பெரு நகரங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் பலர் இடம்பெயர்கின்றனர்.
பெரம்பலூர் தொகுதியின் முக்கிய பிரச்னைகள்:
விளைவிக்கும் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்கவில்லை என்கிற அதிருப்தி இப்பகுதி விவசாயிகளிடம் உள்ளது. எனவே, சின்ன வெங்காயம், வாழை ஆகிய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும், பெருமளவில் ஏற்றுமதி செய்யவும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் பாதை வசதி இல்லாத இம்மாவட்டத்தில் பெரம்பலூர் வழியே ரயில் பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாகக் கிடப்பில் கிடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருமாந்துறை அருகே தனியார் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னமும் தரிசாகக் கிடக்கிறது. இரூர் அருகே சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளாகவும், அரசு மருத்துவக் கல்லூரித் திட்டம் 14 ஆண்டுகளாகவும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன. இத்தொகுதியில் 4 சட்டமன்றத் தொகுதிகளின் வழியே காவிரி ஆறு பாய்கிறது. ஆனாலும், கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ளது.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரலாறு:
பெரம்பலூர் தொகுதி அதிக விஐபி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளது. சிறந்த நாடாளுமன்றவாதியாகப் புகழ்பெற்ற இரா. செழியன் தொடங்கி, நெப்போலியன் மற்றும் ஆ. ராசா வரை இந்த தொகுதியில் இருந்து மக்களவைக்கு சென்றுள்ளனர். அதிகபட்சமாக திமுக 8 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றியை ருசித்துள்ளன.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
1951 | பூவராகசாமி படையாச்சி | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி |
1957 | பழனியாண்டி | காங்கிரஸ் |
1962 | செழியன் | திமுக |
1967 | துரைராசு | திமுக |
1971 | துரைராசு | திமுக |
1977 | அசோக் ராஜ் | அதிமுக |
1980 | கே.பி.எஸ். மணி | காங்கிரஸ் |
1984 | தங்கராசு | அதிமுக |
1989 | தங்கராசு | அதிமுக |
1991 | அசோக் ராஜ் | அதிமுக |
1996 | ஆ. ராசா | திமுக |
1998 | ராஜரத்தினம் | அதிமுக |
1999 | ஆ. ராசா | திமுக |
2004 | ஆ. ராசா | திமுக |
2009 | நெப்போலியன் | திமுக |
2015 | ஆர்.பி. மருதராஜா | அதிமுக |
2019 | பாரிவேந்தர் | இந்திய ஜனநாயக கட்சி (திமுக) |
வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் - 6,97,984
பெண் வாக்காளர்கள் - 7,41,200
மூன்றாம் பாலினத்தவர் - 131
மொத்த வாக்காளர்கள் - 14,39,315
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
குளித்தலை - மாணிக்கம் (திமுக)
லால்குடி - சவுந்திர பாண்டியன் (திமுக)
மண்ணச்சநல்லூர் - கதிரவன் (திமுக)
முசிறி - தியாகராஜன் (திமுக)
துறையூர் (தனி) - ஸ்டாலின் குமார் (திமுக)
பெரம்பலூர் (தனி) - பிரபாகரன் (மதிமுக)
பாரிவேந்தர் எம்.பி., சாதித்தாரா? சறுக்கினாரா?
அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வை தொடங்கியது, விவசாயிகளுக்கான கிசான் ரயில் திட்டத்தை பரிசீலனைக்கு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்க சாதனையாக கூறப்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஆண்டுக்கு தலா 50 மாணவ மாணவிகளுக்கு தனது கல்வி நிறுவனத்தில் சேர்த்து இலவச உயர்கல்வி வழங்கியுள்ளார் . தொகுதி முழுவதும் மக்களுக்கு இலவசமாகவும், சலுகை கட்டணத்திலும் மருத்துவ சிகிச்சை அளித்ததும், கொரோனா காலத்தில் சொந்த செலவில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை விநியோகித்ததும், தொகுதி வாரியாக மக்களின் பிரச்னைகளை மனுவாக பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதும் கவனம் ஈர்த்துள்ளது.
அதேநேரம், தொகுதி பக்கம் பாரிவேந்தரை பார்க்கவே முடியவில்லை என்பதே பெரும்பாலான வாக்காளர்களின் குரலாக உள்ளது. முசிறி தொகுதியில் வாழை ஏற்றுமதி மண்டலம் அமைப்பது, குளித்தலை சுங்க ரயில் மேம்பாலம் அமைப்பது மற்றும் மாயனூர் கதவணையில் இருந்து பரங்கிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது பாரம்பரியமிக்க மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி வகையை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை, காவரி ஆற்றில் இருந்து தாத்தையங்கார்பேட்டை வரை தண்ணீர் கொண்டுசெல்ல நடவடிக்க இல்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. வேலைவாய்ப்பு கிடைக்காமல் பெருநகரங்களை நோக்கி இளைஞர்கள் படையெடுப்பது தொடர்கதையாக உள்ளது.