இஸ்ரேல் நாட்டு பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள பெகாசஸ் போன்ற ஒரு ஸ்பைவேரைப் பயன்படுத்துவதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவாகும் என்று கூறப்படுகிறது . என்எஸ்ஓ நிறுவனத்தின் 2016ம் ஆண்டு வணிக மதிப்பு முன்மொழிவு ஆவணங்களின் அடிப்பையிலான மதிப்பீடுகளின்படி, 300 நபர்களை உளவுபார்க்க இந்திய அரசு 56 கோடி ரூபாய் முதல் 1400 கோடி வரை செலவு செய்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெகசஸ் விலை நிலவரம்:
பிரபல ஆங்கில நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் இஸ்ரேல் என்எஸ்ஓ குழுமத்தின் 2016 வணிக மதிப்பு முன்மொழிவு ஆவணங்களை வெளியிட்டது.
அதில்,
- 5 லட்சம் அமெரிக்கா டாலர் பெகசஸ் மென்பொருளை நிறுவுவதற்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது;
- முதல் 10 ஐபோன்/ஆண்ட்ராய்டு போன்களை வேவுபார்க்க 6.5 லட்சம் அமெரிக்கா டாலர், 5 ப்ளாக்பெரி பயனர்களை வேவுபார்க்க 5 லட்சம் அமெரிக்கா டாலர், 5 சிம்பியன் இயங்குதள பயனர்களை கண்காணிக்க 3 லட்சம் அமெரிக்கா டாலர் கட்டணமாக பெறப்படுகிறது;
- 100 பேர் வரையிலான கூடுதல் நபர்களை வேவுபார்க்க 8 லட்சம் அமெரிக்க டாலர், 50 நபர்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர், 20 நபர்களுக்கு 1.5 லட்சம் அமெரிக்க டாலர் என்றளவில் வசூலிக்கப்படுகிறது.
- ஆரம்ப உரிமக் கட்டணத்திற்குப் பிறகு, ஆண்டும் மொத்த செலவில் 17 சதவீதத்தை விரிவான வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக என்எஸ்ஓ வசூலித்தது. மேலும், இந்த பரமாரிப்பு கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதி, தற்போது ஒன்றிய அமைச்சர்களாக இருப்பவர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என 300க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களும் இந்த உளவுச் செயலியால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இந்த உளவு பார்க்கும் வேளையில் பல்வேறு முகமைகள் ஈடுபட்டிருந்தால் (தற்போது வரை ஈஸ்ரேலின் என்எஸ்ஒ குழுமம் பெயர் மட்டுமே அடிபடுகிறது) செலவினங்கள் மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Candiru:
இருப்பினும், சந்தையில் கிடைக்கும் மற்றொரு வேவுபார்க்கும் செயலியான 'Candiru'-ன் தற்போதைய விலைமதிப்பு, 2016 பெகசஸ் விலை மதிப்பை விட கிட்டத்தட்ட 25 மடங்கு கூடுதலாக உள்ளது. Candiru- ஐ விட 'பெகசஸ்' செயலி அதிக செயல்திறன் கொண்டதாகவும் கருதப்படுகிறது. உதாரணமாக, Candiru செயலியை நிறுவவதற்கு மட்டும் 28 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது, 2016ல் என்எஸ்ஒ குழுமம் வசூலித்ததை விட 60 மடங்கு அதிகமாகும். எனவே, Candiru-வின் சந்தை விலை நிலவரங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், பெகசஸ் ஸ்பைவேர் மூலம் 300 நபர்களை உளவு பார்க்க இந்திய அரசு 1,401 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
ஊடகங்கள் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் Candiru உளவு செயலி பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன.
பெகசஸ் உளவு செயலி அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக இஸ்ரேல் அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது. அந்த செயலி இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது என்று 2019 ஆம் ஆண்டிலேயே குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, இந்த செயலியை பயன்படுத்துவதற்கான நிதியை இந்திய அரசே வழங்கியிருக்கமுடியும் என்பது கூடுதல் தகவலாகும்.
மேலும், வாசிக்க:
Pegasus Spyware Update: ராகுல் காந்தியின் 2 செல்போன் எண்களை டார்கெட் செய்த பெகாசஸ் ஸ்பைவேர்..!