காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பயன்படுத்திய 2 செல்போன் எண்கள் மற்றும் அவரின் நண்பர்கள், ஆலோசகர்களின் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகாசஸ் செயலி இப்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ மீது ஏற்கெனவே வாட்ஸ் அப் நிறுவனமும் புகார் கொடுத்திருந்தது.
இந்தியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் நிபுணர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பயன்படுத்திய 2 செல்போன் எண்கள் மற்றும் அவரின் நண்பர்கள், ஆலோசகர்களின் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது. மேலும், பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனும், சட்டமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் செல்போனும் உளவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மற்றும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு உளவு பார்க்கவில்லை என்று கூறிய, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரின் செல்போனும் உளவுபார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “பெகாஸஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றாக தெரியும். இந்தியாவில் சட்டவிரோதமாக உளவுபார்த்தல் என்பது சாத்தியமில்லை. இந்தியாவில் அங்கீகாரமற்ற கண்காணிப்பு ஒருபோதும் நடைபெறாது. நாடாளுமன்றம் கூடுவதற்கு ஒருநாள் முன்னதாக, பரபரப்பான செய்திகள் வெளியானது தற்செயலானது அல்ல. தொழில்நுட்ப ரீதியாக சம்பந்தப்பட்ட தொலைபேசிகளை ஆய்வு செய்யாமல் முடிவு செய்ய இயலாது. தொலைபேசிகள் உளவு பார்த்த நாடுகள் பட்டியல் தவறானது என மென்பொருள் தயாரித்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஒருவருடைய தொலைபேசியை உளவு பார்க்க வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகள் உள்ளது. அந்த விதிகளை மீறி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரையும் உளவு பார்க்கவில்லை” என்று கூறினார்.
தி வயரின் அறிக்கையில் சில முக்கியமான அறிக்கைகள் இங்கே:
தி வயரின் அறிக்கையைப் பொறுத்தவரை, ராகுல் காந்தி மட்டுமல்ல, அவரது 5 நண்பர்கள் / அறிமுகமானவர்களின் தொடர்புகள் ட்டியலில் இருந்தது. ராகுலின் செல்போன்கள் இல்லை என்றாலும், 2018 நடுப்பகுதியில் இருந்து 2019 நடுப்பகுதி வரை அவரது எண்கள் உளவுபார்க்கப்பட்டதாக தெரிகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் மற்றும் டி.எம்.சி அபிஷேக் பானர்ஜியும் இந்த பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் பிரஷாந்த் கிஷோரின் செல்போனும் உளவுப்பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2014 தேர்தலுக்குப் பிறகு பிரிந்து, பல எதிர்க்கட்சிகளுக்காக பல்வேறு புள்ளிகளில் பணியாற்றியவர் பிரஷாந்த் கிஷோர்.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பாலியல் புகார் கூறிய பெண் அவரது கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் பயன்படுத்திய சுமார் 11 தொலைபேசி எண்கள் இந்த பட்டியலில் இருந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவும் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது லவாசா தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டதற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
40 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், 3 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், நரேந்திர மோடி அரசாங்கத்தில் பணியாற்றும் 2 அமைச்சர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் ஏராளமான தொழிலதிபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.