அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என மக்களவையில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.


இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகாசஸ் செயலி இப்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ மீது ஏற்கெனவே வாட்ஸ் அப் நிறுவனமும் புகார் கொடுத்திருந்தது. 


 இந்தியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் நிபுணர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 


 






இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “பெகாஸஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றாக தெரியும். இந்தியாவில் சட்டவிரோதமாக உளவுபார்த்தல் என்பது சாத்தியமில்லை. இந்தியாவில் அங்கீகாரமற்ற கண்காணிப்பு ஒருபோதும் நடைபெறாது. நாடாளுமன்றம் கூடுவதற்கு ஒருநாள் முன்னதாக, பரபரப்பான செய்திகள் வெளியானது தற்செயலானது அல்ல. தொழில்நுட்ப ரீதியாக சம்பந்தப்பட்ட தொலைபேசிகளை ஆய்வு செய்யாமல் முடிவு செய்ய இயலாது. தொலைபேசிகள் உளவு பார்த்த நாடுகள் பட்டியல் தவறானது என மென்பொருள் தயாரித்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஒருவருடைய தொலைபேசியை உளவு பார்க்க வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகள் உள்ளது. அந்த விதிகளை மீறி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரையும் உளவு பார்க்கவில்லை” என்று கூறினார்.


பெகசஸ் வரலாறு இதுதான்..



பெகசஸ் ஸ்பைவேர் முதன்முதலில் 2016ல் தான் வெளிச்சத்துக்கு வந்தது. முதன்முதலில் அரபு நாட்டு சமூக ஆர்வலர் ஒருவரின் ஃபோன் ஹேக் செய்யப்பட்டது. அப்போது பெகசஸ் ஐஃபோன்களை தாக்குவதாக கண்டறியப்பட்டது. உடனே ஆப்பிள் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு இந்த ஸ்பைவேரை எதிர்கொண்டது.


ஓராண்டுக்குப் பின்னர் பெகசஸ் ஸ்பைவேர், ஆண்ட்ராய்டு ஃபோன்களையும் தாக்குவது உறுதியானது. அப்போதுதான் இந்தியர்களின் சில வாட்ஸ் அப் கணக்குகளும் இந்த ஸ்பைவேரில் தாக்குதலுக்கு உள்ளானது தெரியவந்தது. இந்நிலையில் என்எஸ்ஓ நிறுவனமானது நாங்கள் ஸ்பைவேர் செயலியை மட்டுமே உருவாக்கியுள்ளோம். இதை நாங்கள் சில அரசாங்களுக்கு விற்றுள்ளோம். ஆனால், அந்த செயலியைக் கொண்டு யார் கண்காணிக்கப்படுகிறார்கள் என்பது அந்தந்த அரசாங்கத்தின் மீதான பொறுப்பே தவிர எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டது.