இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகாசஸ் செயலி இப்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது கடும் விமர்சனத்தை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் பாஜகவின் மாநிலங்களவை எம்பியான சுப்ரமணியன் சுவாமி இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக ட்வீட் செய்து வருகிறார். அதில், "பெகசஸ் விவாகரத்தில் நாம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் இதுகுறித்து இஸ்ரேல் பிரதமருக்கு மோடி கடிதம் எழுத வேண்டும். அதன்மூலம் யார் உண்மையில் இந்தியாவில் பயன்படுத்த ஒப்பந்தம் செய்தார்கள் என்பதை கண்டறிய வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே பெகசஸ் ஸ்பைவேரை ஒப்பந்தம் மூலமே பயன்படுத்த முடியும் என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே இந்தியாவில் இருப்பவர்களை உளவு பார்ப்பதற்கு யார் இந்த ஒப்பந்தம் செய்து வாங்கினார்கள்? இந்திய அரசு அதை வாங்கவில்லை என்றால் வேறு யார் இதை வாங்கினார்கள்? என்பதை மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த கடமை பட்டுள்ளது" எனப் பதிவிட்டிருந்தார். அத்துடன் மத்திய உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் இந்த விவாகரம் தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜேவாலா, மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் மக்களவைக் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பெகசஸ் உளவுக்குப் பின்னால் இருப்பது இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் காரணம் என்று குற்றம் சாட்டியும், உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதோடு பெகசஸ் செயலின் மூலம் உளவுபார்க்கும் செயல் என்பது, இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடியுள்ளதாகவும், இந்த உளவுபார்க்கும் செயல் நிச்சயம் வெட்கக்கேடானது என விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் இப்பிரச்சனைக்குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் உளவு விவகாரம் சரியாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக வெளியானதால் எவ்வித பின்னணியும் இல்லை எனவும் ஊடகங்களில்தான் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆகையால் இதனை கூட்டத்தொடரொடு தொடர்புப்படுத்தி பார்க்கத் தேவையில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆபாசப்படம் தயாரிப்பு.. ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பா? - மும்பை போலீசார் விளக்கம்..!