மஹிந்திரா கார் நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திராவை சிட்டிசன்கள் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ நெட்டிசன்கள் நன்றாகவே அறிந்திருப்பர்.


காரணம் அவருடைய ட்வீட்கள் ஒவ்வொன்றுமே கவனம் ஈர்க்கும் ரகம். கேரளாவில் பெருமழை வெள்ளம் பாத்தித்தபோது மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் தனது தோளைக் கொடுத்து பெண் ஒருவர் படகில் ஏற உதவினார். அந்த மீனவர் குறித்த செய்தி வைரலாக அவரைக் கண்டறிந்து அவருக்கும் அப்போதுதான் சந்தைக்குப் புதிதாக வந்திருந்த மகேந்திராவின் மாராஸோ காரை பரிசாகக் கொடுத்தார்.






அதேபோல் நல்ல விஷயங்களைப் பாராட்டுவதிலு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. அதேபோல், கோவையில்  ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி வந்த ‘இட்லி அம்மா’ கமலாத்தாளுக்கு சொந்த வீடு வழங்கியவர்தான் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா. இப்போது அவருடைய மற்றொரு ட்வீட் மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. தங்கத்திலான ஃபெராரி கார் பற்றிய ட்வீட் தான் அது. அண்மையில் அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் முற்றிலும் தங்கத்திலான ஃபெராரி ரக காரை ஓட்ட அதை ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததோடு, அதை வீடியோவாக எடுத்து வைரலாக்கியது. அந்த வீடியோவில் நடுத்தர வயது இருக்கும் நபர் ஒருவர் பகட்டாக அந்தக் காரில் ஏறுவதும். சுற்றி நின்று தனது காரை பலரும் வேடிக்கைப் பார்ப்பதை அறிந்து பணச் சிரிப்பை உதிரிப்பதும் இடம்பெற்றிருந்தது.


இந்த வைரல் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, "இந்த வீடியோ எதற்காக சமூக வலைதளத்தில் வைரலாகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வீடியோவைப் பார்ப்போர் நமக்கு எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அந்த செல்வத்தை எப்படிப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான உதாரணமாக மட்டுமே இதை எடுத்துக் கொள்ளலாம்" என சற்று காட்டமாகவே பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு 24 மணிநேரத்தில் 1,69,300-க்கும் அதிகமான பார்வைகளையும், 6000க்கு அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கருத்தை ஏற்றுக் கொள்வதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


இன்னும் சிலர் அது தங்கக் கார் அல்ல தங்கத்தைப் போன்று ஜொலிக்கும் மெட்டாலிக் ஃபினிஷ் கொண்ட கார் என்று கூறியுள்ளார்கள். சிலர்,  2014-ஆம் ஆண்டு ஈராக்கைச் சேர்ந்த உலக கிக்பாக்ஸிங் சாம்பியனான ரியாத் அல் ஆஸாவி என்பவர் வாங்கிய தங்கத்திலான ஃபெராரி 458 ஸ்பைடர் ரக காரை பகிர்ந்து வருகின்றனர். 2017ல், அந்தக் கார் தங்கத்தினால் ஆனது அல்ல, மாறாக தங்க தகடால் போர்த்தப்பட்ட கார் என்ற விவரம் வெளியானதையும் சுட்டிக்காட்டி ட்வீட்களைப் பதிவு செய்து வருகின்றனர்.