மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கேரல் பஞ்சாயத்தில் வசிக்கும் இரண்டு முஸ்லிம்கள் 500 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலுக்கு சாலை அமைப்பதற்காக தங்கள் நிலத்தை வழங்கியுள்ளனர்.
கௌரி சங்கர் கோயிலுக்கு சாலை:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் கேரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கௌரி சங்கர் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு சாலை அமைக்கும் வகையில், பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அப்பதியில் சில தனி நபர்களுக்கு சொந்தமான பகுதியின் வழியாக சாலை சென்றதால் சாலை அமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், கோயிலுக்கு சாலைகள் அமைப்பது தொடர்பாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது.
நிலம் வழங்கிய இஸ்லாமியர்கள்:
கூட்டத்தில், நில உரிமையாளர்கள் குலாம் ரசூல், குலாம் முகமது ஆகியோர் தங்களின் நிலத்தின் சில பகுதிகளை, இந்து கோயிலுக்கு சாலை அமைக்க, வழங்குவதாக ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் சாலை அமைக்க, அப்பகுதியில் வசிக்கும் குலாம் ரசூல் மற்றும் குலாம் முகமது ஆகியோர் நிலங்களை தாராளமாக வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தின் மதிப்பீடு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என கூறப்படுகிறது.
மேலும் ரியாசி மாவட்டத்தின் கான்சி பட்டா கிராமத்தில் உள்ள கௌரி சங்கர் கோவிலுக்கு 10 அடி அகலத்தில் 1200 மீட்டர் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். விவசாயியாக உள்ள குலாம் ரசூல் கூறியதாவது, சாலை பிரச்னையை முன்னிறுத்தி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயன்றனர். "கோயிலுக்கு சரியான சாலை இல்லை. சிலர் பிளவை உருவாக்கும் நோக்கில் வெறுப்பு பிரச்சாரத்தையும் நடத்தினர், என்றும் கூறினார். கோயிலை சீரமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
மாற்று மதத்தினருக்கு, சொந்த நிலத்தை வழங்கியுள்ள சம்பவம், மத நல்லிணக்கத்துக்கு உதாரணமான செயல் என்றும், இதுதான் இந்தியா என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read: Breaking Tamil LIVE: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்!