நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. ஏற்கனவே, மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நாளை நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடக்க  உள்ளது.


ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி:


முதல் மூன்று கட்டங்களில் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. நாளை, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், மேற்குவங்கம் உள்பட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ள மேற்குவங்கத்தில் நாளை 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மேற்குவங்கத்தில் கணிசமான எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது.


இதற்காக, பிரதமர் மோடி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பராக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். அப்போது, ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.


"இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்ட இந்துக்கள்"


"மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு நாடு முழுவதும் 'ஷெஹ்சாதா'வின் (ராகுல் காந்தி) வயதை விட குறைவான இடங்களே கிடைக்கும்" என பிரதமர் சாடினார். இதைத்தொடர்ந்து, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அவர், "திரிணாமுல் ஆட்சியின் கீழ், மாநிலத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறியுள்ளனர்.


மோடி இருக்கும் வரை, சி.ஏ.ஏ. சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது. சந்தேஷ்காலியின் சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கு திரிணாமுல் என்ன செய்தது? என்பது நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். முக்கிய குற்றவாளியின் பெயர் ஷாஜஹான் ஷேக் என்பதால் சந்தேஷ்காலியில் உள்ள பெண்களை திரிணாமுல் குண்டர்கள் இப்போது மிரட்டி வருகிறார்கள். சந்தேஷ்காலி குற்றவாளிகளை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் திரிணாமுல் செய்து வருகிறது" என்றார்.


ராமநவமியை கொண்டாட முடியாது:


தொடர்ந்து பேசிய பிரதமர், "மேற்கு வங்காளத்தில் வாக்கு வங்கி அரசியலுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் சரணடைந்துள்ளது. அங்கு நீங்கள் ஸ்ரீராமரின் பெயரை வைக்க முடியாது. ராம நவமியைக் கொண்டாட முடியாது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் வங்காளத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டுள்ளனர்" என்றார்.


பின்னர், ஹூக்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்க்கட்சியாக இருந்தும் எதுவும் செய்ய முடியாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளால் ஆட்சி அமைக்க முடியாது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே உங்களுக்கு நிலையான மற்றும் வலுவான ஆட்சியை வழங்க முடியும்" என்றார்.