Poonch terror attack: தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ராணுவ வீரர்களுக்காக ஒன்றிணவோம் என அரசியல் கட்சி தலைவர்கள் பேசியுள்ளனர்.


ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல்:


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில், விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு கட்சி வேறுபாடுகளை கடந்து அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இராணுவ ஆதாரங்களின்படி, விமானப்படை வீரர்களை ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்கள் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஷாசிதார் அருகே சென்றபோது, தீவிரவாதிகளால் துப்பாக்கிச் சூடு தாக்குதலை எதிர்கொண்டன.  காயமடைந்த வீரர்கள் IAF ஹெலிகாப்டர்களில் சிகிச்சைக்காக உதம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தலைவர்கள் கண்டனம்:


இந்த தாக்குதல் வெட்கக்கேடானது மற்றும் கோழைத்தனமானது என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் எங்கள் ராணுவ வாகனத்தின் மீது நடந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல் மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.






காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ ஜம்மு & காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​என்ற இடத்தில் இந்திய விமானப்படை வாகனம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க தேசத்துடன் இணைகிறோம். மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான விமானப் போராளியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள், ”என தெரிவித்துள்ளார்.


ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார், இது "பயங்கரவாதிகளின் இழிவான, வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயல்" என்றும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவ்த்து வருகின்றனர்.


இதனிடையே, விமானப்படை வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில்,  தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.