நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரத்தை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், மக்களவையில் இன்றும் அந்த பிரச்னை எதிரொலித்துள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால் மக்களவை முதலில் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர், ஜூலை 24ஆம் தேதி காலை 11 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.


மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்:


முன்னதாக, எதிர்க்கட்சியினரின் அமளிக்கு மத்தியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "மணிப்பூரில் நடந்தது மிக மோசமான சம்பவம். நிலைமையைப் புரிந்துகொண்டு, மணிப்பூரில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பிரதமரே கூறியுள்ளார்.


இதையும் படிக்க: Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!


இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். மணிப்பூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இதை அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் நான் கூறியிருந்தேன். மணிப்பூர் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.


அதிர்ந்து போன நாடாளுமன்றம்:


ஆனால், ஒரு சில அரசியல் கட்சிகள் தேவையில்லாமல், மணிப்பூர் பற்றிய விவாதத்தை நடத்த விடாத சூழ்நிலையை உருவாக்க விரும்புவதை நான் காண்கிறேன். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இருந்திருக்க வேண்டிய  தீவிரம் அவர்களிடம் இல்லை என்று நான் தெளிவாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன்" என்றார்.


மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவை இன்று மதியம் 2:00 மணி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்குவதற்கு முன்பு, செய்தியாளர்களிடம் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "நான் நாட்டுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன், குற்றவாளிகள் யாரையும் தப்பிக்க விட மாட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது.


இந்த ஜனநாயகக் கோயிலுக்கு (நாடாளுமன்றம்) பக்கத்தில் நான் நிற்கும்போது, ​​என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்த நாகரீக தேசத்திற்கும் வெட்கக்கேடானது. ஒட்டுமொத்த நாடும் அவமானப்பட்டு விட்டது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டங்களை வலுப்படுத்துமாறு அனைத்து முதலமைச்சர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.


மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்றும், மணிப்பூர் விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் முடங்கியது குறிப்பிதக்கத்தது.