CM MK Stalin EXCLUSIVE Interview to ABP Nadu: ஏபிபி நாடு சார்பில் முன் வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் நேர்காணல்:
2024 நாடாளுமன்ற தேர்தல், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, பாஜக கூட்டணி, அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை, திமுக - பாஜக மோதல், திமுக மீதான குடும்ப அரசியல் குற்றச்சாட்டு என, வழக்கம்போல் தமிழக அரசியல் பஞ்சமே இன்றி பல்வேறு விவகாரங்களால் பரபரப்பாக தான் நீடிக்கிறது. இந்நிலையில், மக்கள் மனதில் தொடரும் சந்தேகங்களை ஏபிபி நாடு கேள்வியாக எழுப்ப, முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு விரிவான பதில்களை தந்துள்ளார். அதன் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: மக்களைத் தேடி மருத்துவம், பள்ளிகளில் காலை உணவு, பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து சேவை, புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் மூலம் பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வரும் தாங்கள், இன்னும் 3 ஆண்டிற்குள் முழு மதுவிலக்கு என்பதையும் கலைஞர் நூற்றாண்டின் பெரும் அறிவிப்பாக வெளியிடுவீர்களா? ஏனெனில் தமிழ்நாடு இல்லத்தரசிகளின் பெரும் கோரிக்கையாக இது இருக்கிறது.
முதலமைச்சரின் பதில்: ”தங்களுடைய கேள்வியிலிருந்தே திராவிட மாடல் அரசு மக்களுக்குப் பயன் தரும் திட்டங்களை, குறிப்பாக பெண்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருவதை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுவிலக்கு கொள்கையைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான அரசு தெளிவான பார்வையுடன்செயல்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டையொட்டி 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதுபோல படிப்படியாகக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு பரப்புரை செய்வதும் தொடர்ந்து நடைபெறும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் தகராறு செய்வது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும் செயல்பாடுகள் மீது தீவிர கண்காணிப்பு செலுத்தி, அவற்றின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மதுவைப் பயன்படுத்துவோரால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் களைவதில் முனைப்பாக இருக்கிறோம். இல்லத்தரசிகளின் கோரிக்கையை மனதில் நிலைநிறுத்தியே இவ்வளவு தீவிரமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்பதை உங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்”
கேள்வி: நாட்டை ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்தி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு விதைபோட்ட தங்களின் முயற்சிக்கு பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஆனால், எதிரும் புதிருமாக இருக்கும் சில கட்சிகள், ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பதில் பெரும் சிக்கல்கள் நேரிடும். இது பா.ஜ.க.வுக்கு சாதகமாகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது குறித்து தங்கள் பார்வை.
முதலமைச்சரின் பதில்: ”அந்த எண்ணம் முறியடிக்கப்பட்டு விட்டது. இப்போது "INDIA" என்ற கூட்டணி பெங்களூருவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் உருவாக்கப்பட்டு விட்டது. பல கட்சிகளையும் ஒரு பொது நோக்கத்தின் அடிப்படையில் இணைக்க முடியும் என்பதை இந்திய அரசியலில் தி.மு.கழகம் ஏற்கனவே பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. அதில் முதன்மைப் பங்காற்றிய பெருமை முத்தமிழறிஞர் கலைஞருக்கு உண்டு. அதே போல் இப்போது பெங்களூரில் நானும் பங்கேற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் இந்தியாவைக் காப்பாற்ற "INDIA" உருவாகியிருக்கிறது. நாட்டைக் காப்பாற்ற வேண்டும். நம் அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் எதிர்கட்சிகளுக்கு உள்ள ஒற்றுமை வெளிப்பட்டு விட்டது. இப்படி ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகளை பார்த்து பா.ஜ.க. மிரளுகிறது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை ஏவி ஒடுக்கிவிடலாம் என ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. இதிலிருந்தே, எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பால் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ள பயம் வெளிப்படுவதை உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே பா.ஜ.க.ஆட்சியின் கவுண்டவுன் பெங்களூரில் துவங்கி விட்டது என்றே நம்புகிறேன்.
கேள்வி: தேசிய அளவில் தங்களின் மெகா கூட்டணி கனவு மெய்ப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த பா.ஜ.க.வை வீழ்த்த எப்படிப்பட்ட வியூகங்களை தங்களின் சார்பில் முன் வைத்துள்ளீர்கள்?
முதலமைச்சரின் பதில்: ”நீங்கள் கேட்பது போல் பா.ஜ.க. சக்தி வாய்ந்த கட்சி அல்ல. அவர்களுக்கு பலம் இருக்கிறது என்றால் எதிர்கட்சிகள் ஒன்றிணைவதைப் பார்த்து ஏன் அவர்கள் அலற வேண்டும்? பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்புக்கான முதல் கூட்டத்திலேயே தேர்தல் வியூகம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டம் முடிந்து சென்னைக்குத் திரும்பிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 7 முக்கிய கருத்துக்களை எடுத்து வைத்தேன். மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியது. இதேபோல தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினேன். எந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறினேன். ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனப் பேசியதையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டேன். என்னைப் போன்று கருத்து சொன்ன கூட்டணித் தலைவர்களின் எண்ணங்களுக்கு முழு வடிவம் கொடுக்கும் வகையில்தான் பெங்களூரு கூட்டத்தில் INDIA உருவாகியிருக்கிறது. களத்தில் என்ன வியூகங்கள் என்பதை தேர்தல் நெருங்க நெருங்க நீங்களே அறிந்து கொள்வீர்கள்.”
கேள்வி: மோடி தான் பிரதமர் என களமிறங்கும் பா.ஜ.க.வை வீழ்த்த, தங்களின் கூட்டணியில் இவர் தான் பிரதமர் என அறிவித்து களமிறங்க வாய்ப்பு இருக்கிறதா? கடந்த முறை தாங்கள் ராகுல் காந்தியை முன் நிறுத்தினீர்கள் என்பதால் இந்தக் கேள்வி.
முதலமைச்சரின் பதில்: ”பிரதமர் யார் என்பதை விட ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவ இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். பெங்களூர் கூட்டம் முடிந்த உடனேயே நான் "யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் இப்போது எங்களின் இலக்கு" என்று கூறியிருக்கிறேன். ஆகவே பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. மோடி தலைமையிலோ அல்லது வேறு யார் தலைமையிலோ பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் ஒருமைப்பாடும், மாநில உரிமைகளும் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், அதற்கேற்ப எதிர்க்கட்சிகளின் வியூகம் அமையும். இன்னொன்றையும் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக வருவார் என்று யாரும் அறிவிக்கவும் இல்லை எதிர்பார்க்கவுமில்லை. ஆனால், அவர் தலைமையில் 10 ஆண்டுகள் நிலையான ஆட்சி இந்தியாவிற்கு நீடித்த வளர்ச்சிக்குமான ஆட்சி வழங்கப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.”
கேள்வி: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்நோக்க உள்ளது. அ.தி.மு.க- பா.ஜ.க. கட்சிகள், தற்போதே ஊழல் குற்றச்சாட்டுகளையும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதையும் பெரும் பேச்சாக்கி வருகின்றனர். தங்களுடைய பதிலடி என்ன?
முதலமைச்சரின் பதில்: ”அது பெரும் பேச்சு மட்டுமல்ல. வெறும் பேச்சும்தான். அப்படிச் சொல்வதை விட ஒரு பொய்ப் பிரச்சாரம் அது. மக்கள் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்களின் எரிச்சலின் வெளிப்பாடு. குறுகிய காலத்தில் சென்னை கிண்டியில் ஒரு பல்நோக்கு மருத்துவமனையையும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் கட்டி - மக்களுக்கு மருத்துவ சேவையும், இளைஞர்களுக்கு அறிவுக் களஞ்சியமும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு. இப்படி ஆக்கபூர்வமான திட்டத்தை செயல்படுத்தியுள்ள அரசை வேறு எங்காவது அடையாளம் காட்டிட முடியுமா? இந்த அரசுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் முன் வைக்க முடியாததால், தூசைத் துரும்பாக்கவும், ஈரைப் பேனாக்கவும் பார்க்கின்றனர். அது மக்களிடம் எடுபடாது. நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறும். "40க்கு 40" என்ற எங்கள் முழக்கம் நிறைவேறும்.”
கேள்வி: தற்போதெல்லாம் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் சி.பி.ஐ. வருமான வரித்துறை, ஆளுநர் ஆகியவை எப்போதும் முதன்மைப் பேசுபொருளாக இருக்கிறது. இதைப் பற்றித் தங்களின் கருத்து என்ன?
முதலமைச்சரின் பதில்: ”மக்களாட்சி மீதோ, ஜனநாயகத்தின் மீதோ, டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதோ பா.ஜ.க. அரசுக்கு கொஞ்சமும் நம்பிக்கையோ மரியாதையோ இல்லை என்பதையே அதன் அராஜக, அத்துமீறிய நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஆளுநரைக் கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக செயல்பட முனைவது, பா.ஜ.க.வின் கொள்கையை எதிர்க்கும் கட்சிகள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வருமானவரித்துறை போன்றவற்றை ஏவிவிடுவது, அதேநேரத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிற கட்சியினர் தங்கள் கட்சியில் இணைந்துவிட்டால் புனித நீர் தெளித்து அமைச்சரவையில் இடமளிப்பது போன்ற மிக மோசமான - இழிவான ஜனநாயகத்திற்கு ஆபத்தான போக்கில் பா.ஜ.க. செயல்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் ஆளுநர் இசைவாணை அளிக்காமல் கோப்பை கிடப்பில் போட்டு வைத்து - அந்த அனுமதியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. 11 ஆவது முறையாக வாய்தா கேட்கிறது. ஆனால் அதே நாளில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நீர்த்துப் போன வழக்கில் அமலாக்கத்துறை சோதனை போடுகிறது. ஒன்றிய பாஜக. அரசின் இந்த இரட்டை வேடத்தை மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலில் அவர்கள் பா.ஜ.க.விற்கு தக்க தீர்ப்பு வழங்குவார்கள்.”
கேள்வி: முன்பெல்லாம் தமிழ்நாட்டில் பெரிய அளவு பேசப்படாத பா.ஜ.க. இன்று நேர்மறை அல்லது எதிர்மறை என ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து பொதுமக்களிடையே பரவலாகி வருகிறது. இதனை தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
முதலமைச்சரின் பதில்: ”நேர்மறை அரசியலுக்கும் பா.ஜ.க.விற்கும் துளியும் சம்பந்தமில்லை. எதிர்மறை அரசியலை மட்டுமே செய்து நாட்டு மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி குளிர் காய நினைக்கும் கட்சி பா.ஜ.க. 9 ஆண்டு கால சாதனைகளை சொல்ல முடியாமல் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து சாதித்துள்ள மாநில அரசுகளை களங்கப்படுத்தி வெற்றி பெற்று விட முடியாதா என்று கனவு காணும் கட்சி பா.ஜ.க. அப்படிப்பட்ட பா.ஜ.க. தமிழ்நாட்டில் மக்களிடையே பரவவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. மீடியாக்கள் மத்தியில் அப்படியொரு கற்பனை தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அவ்வளவுதான்! பொதுவாக ஆளுங்கட்சி என ஒன்று இருக்கும்போது, எதிர்கட்சியாக இருப்பவர்கள்தான் பேசுபொருளை உருவாக்குவார்கள். தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க.விடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. ஊழல் அதிமுகவை கொண்டாடி- அதன் தோளில் ஏறி உட்கார்ந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை பா.ஜ.க. ஈர்க்க முயற்சிக்கிறது. அது கானல் நீராகவே முடியும். ஒரு ஆலோசனை! தங்களுக்கு வாய்ப்பு அமைந்தால், இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் திரு.பழனிசாமியிடம் கேட்டு, உரிய பதில் பெறுங்கள்.”
கேள்வி: குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்றாலும், விசாரணை, கைது என நெருக்கடிகளை சந்திக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து, அ.தி.மு.க.-பா.ஜ.க. போன்ற கட்சிகள் கடும் குற்றச்சாட்டை வைக்கின்றன. குற்றமற்றவர் என நிரூபித்தபின் மீண்டும் அமைச்சராக்குவோம் எனத் தாங்களே நடவடிக்கை எடுப்பதன் மூலம், தங்கள் அரசு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட அரசு என்பதை நிரூபிக்கலாமே, தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கலாமே..?
முதலமைச்சரின் பதில்: ”குற்றங்களுக்கோ, குற்றவாளிகளுக்கோ தி.மு.க ஒருபோதும் ஆதரவளிக்காது. எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் அதைச் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதை நடைமுறையாகக் கொண்டு, இன்று வரை நிரூபித்தும் வருகிறது. செந்தில்பாலாஜி விவகாரத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நடந்திருக்க வேண்டியது ஒன்றிய அரசின் அமைப்புகளே தவிர, தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு அல்ல. அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள், வழக்குகள், சோதனைகள் எல்லாம் உண்டு.ஆனால், அவர்கள் மீது பாயாத கைது நடவடிக்கையை செந்தில் பாலாஜி அவர்கள் மீது பாய விட்டதன் மூலம் சர்ச்சையை உருவாக்கியது பா.ஜ.க அரசுதான். தி.மு.க. அல்ல. அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா பற்றி கேள்வி கேட்கும் பா.ஜ.க. முதலில் தங்கள் அமைச்சரவையில் உள்ள "குற்றப் பின்னணி" கொண்ட அமைச்சர்களை நீக்கட்டும். தார்மீக நெறிமுறை என்பது அரசியலில் நிச்சயம் ஒரு வழிப் பாதை அல்ல”
கேள்வி: டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்து, தொழில்துறையில் முதலீடுகளை ஈர்த்து வருகிறீர்கள். ஆனால், எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் சுற்றுப்பயணம். சொந்தப் பயணம் என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். இதுவரை வந்த முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்ற அவர்களின் விமர்சனத்திற்குத் தங்களின் பதிலடி?
முதலமைச்சரின் பதில்: ”பிரதமர் மோடி அவர்களும், தரை தவழ்ந்து, ஊர்ந்து, காலைத் தொட்டு முதலமைச்சராக இருந்த பழனிசாமி அவர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள்தான். அவர்களுடைய அனுபவத்தை அவரது கட்சியினர் எங்கள் மீது திணிக்க நினைத்திருக்கலாம். திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, பத்தாண்டுகள் படுகுழியில் தள்ளப்பட்ட தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை இந்திய அளவில் முதன்மையாகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் டிரில்லியன் டாலர் என்ற இலக்குடன் பயணிக்கிறோம். முதலீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலைப்பட வேண்டியதில்லை. வருகிற ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து முதலீடுகள், அதனால் உருவான தொழிலகங்கள், அதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைத்துள்ள கிடைக்கவிருக்கின்ற வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட எல்லா விவரங்களும் வெளிப்படையாக வழங்கப்படும்.”
கேள்வி: ஒரு தந்தையாக, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, அமைச்சர் உதயநிதி யாருடைய செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.?
முதலமைச்சரின் பதில்: உதயநிதிக்கு நான் தந்தை. இளைஞரணிக்கு நான் தாய். அமைச்சரவையில் எல்லாரும் என் தோழர்கள். அதனால், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உதயநிதி அவர்கள் ஏற்று செயல்படுத்துகிற விதத்தைத் தந்தையாகவும் தாயாகவும் தோழமை உணர்வுடனும் கவனித்து வருகிறேன். சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவர் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்
கேள்வி: இந்தப் பெயர்களைக் கேட்டவுடன் தங்களின் நினைவில் வருபவை:
தந்தை பெரியார் - பகுத்தறிவு-சுயமரியாதை
பேரறிஞர் அண்ணா - இனம், மொழி உணர்வு
கலைஞர் - மரணத்திலும் சளைக்காத போராளி
எம்.ஜி.ஆர் - என்னை ஊக்கப்படுத்தியவர்
ஜெயலலிதா - பிடிவாதம்
நரேந்திர மோடி - குஜராத் முதல்வராக இருந்தபோது மாநில உரிமை பேசியவர்
ராகுல்காந்தி - இந்தியாவின் நம்பிக்கை
-நிதிஷ்குமார் - சமூக நீதியின் வடஇந்தியக் குரல்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி - என் நண்பரின் திறமைமிகுந்த மகன்
மு.க.அழகிரி - எப்போதும் அண்ணன்
துரைமுருகன் - கழகத்தின் அனுபவப் பெட்டகம்
துர்கா ஸ்டாலின் - நீ பாதி-நான் பாதி