Kolai Movie Review in Tamil: பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் எனப் பலரும் நடித்துள்ள படம் ’கொலை’. கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் கொலை படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.


படத்தின் கதை 


உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை, க்ரைம் த்ரில்லர் கதைகளை எடுத்துக் கொண்டால் ஒரு கொலை.. அதற்கான விசாரணை.. கொலையாளியைக் கண்டுபிடிக்கும் படலம்... கொலைக்கான காரணம்... கொலையாளியின் முடிவு... என இது தான் பேட்டர்னாக இருக்கும். ஆனால் திரைக்கதை மேஜிக் தான் ரசிகர்களின் ஈர்ப்புக்கு காரணமாக இருக்கும். அப்படி ஒரு க்ரைம் த்ரில்லர் பாணி கதையாக தான் ‘கொலை’ படமும் அமைந்துள்ளது.


பாடகி மற்றும் மாடல் அழகியாக மீனாட்சி சௌத்ரி கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கு ஐபிஎஸ் அதிகாரியான ரித்திகா சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு காவல் துறையில் இருந்து ஒதுங்கி இருக்கும், அதீத துப்பறிவு திறமை கொண்ட விஜய் ஆண்டனி உதவுகிறார். விசாரணையின் பார்வை காதலன், மேனேஜர், மாடலிங் உலகுக்கு அறிமுகம் செய்தவர், மாடலிங் கம்பெனி நிர்வாகி, கொலை செய்யப்பட்ட மீனாட்சி என அனைவரது பார்வை வழியாகவும் விவரிக்கப்படுகிறது. இறுதியில் உண்மை குற்றவாளி எப்படி சிக்கினான் என்பதை ஹாலிவுட் மேக்கிங் திரைக்கதையால் ரசிகருக்கு கொடுத்துள்ளார் பாலாஜி குமார்.


நடிப்பு எப்படி? 


விஜய் ஆண்டனி தனக்கான கேரக்டரில் அடக்கி வாசித்துள்ளார் என்றே சொல்லலாம். விசாரணையில் அதிர்ந்து பேசாமல் அமைதியான முறையில் ஒவ்வொன்றையும் டீல் செய்வது ஒரு புறம், மறுபுறம்  தன்னுடைய தவறால் மரணப்படுக்கையில் கிடக்கும் மகளுக்காக உருகும் தந்தை என இருவிதமான கேரக்டரை ஓரளவு சரியாக செய்துள்ளார். 


ரித்திகா சிங், படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், மனசாட்சிக்கு உறுத்தாமல் வேலை செய்ய வேண்டும் என நினைக்கும் ‘நல்ல’ போலீஸ் கேரக்டர். ஆனால் அவரது கேரக்டரை இன்னும் அழுத்தமாக கொண்டு போயிருக்கலாம். 


இவர்களை விட மீனாட்சி சௌத்ரி கேரக்டர் தான் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடகியாக அறிமுகமாகி, மாடல் உலகுக்கு சென்று பிரபலமாகி, போலியான வாழ்க்கை வாழ்வதாக உணரும் நபராக வருகிறார். 


மற்றபடி அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் கேரக்டர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்கள். 


படம் எப்படி? 


1923ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பு துலங்காத ஒரு கொலையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்படுள்ளதாக டைட்டில் கார்டில் சொல்லப்படுகிறது. டீசர், இரண்டு ட்ரெய்லர்களை பார்த்து ரசிகர்கள் சிலாகித்தது படத்தின் மேக்கிங்கில் தான். ஹாலிவுட் தரத்திலான அந்த மேக்கிங் தமிழ் சினிமாவுக்கே புதிதாகத் தோன்றுகிறது. 


கதையின் ஓட்டம் காட்சிகள் நடப்பது சென்னையா, அல்லது வெளிநாடா என்னும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் குற்றவாளியை இவர் தான் என ரசிகர்கள் முடிவெடுக்காதபடி காட்சிகளை நகர்த்துவது சாமர்த்தியம் என்றால்,  குற்றவாளையைக் கண்டுபிடிக்கிறேன் என மெதுவான கோணத்தில் நகரும் விசாரணை திரைக்கதை பொறுமையை சோதிக்கிறது. சில லாஜிக் மீறல்களும் ‘அது எப்படி திமிங்கலம்?’ என்ற வசனமாகவே தோன்றுகிறது. 


கிரீஷ் கோபால கிருஷ்ணனின் பின்னணி இசையும், சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் அழகாக கைக்கொடுத்திருக்கிறது. பார்த்த நியாபகம் இல்லையோ பாடல் மட்டும் தான் கேட்கும்படி உள்ளது, மற்ற பாடல்கள் கதைக்காக வைக்கப்படிருந்தாலும் பொருந்திப் போகவில்லை. மொத்தத்தில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை படத்தை அதன் மேக்கிங்கிற்காக ஒரு டைம் தியேட்டரில் பார்க்கலாம். 


பின்குறிப்பு: இந்த படத்தை ஒருவேளை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடியில் நேரடியாகவோ, அல்லது வெப் சீரிஸாக கொண்டு சென்றிருந்தால் கொலை படம் நிச்சயம் அனைவராலும் கவனம் பெற்றிருக்கக்கூடிய க்ரைம் த்ரில்லராக இருந்திருக்க வாய்ப்புள்ளது.