மாதவிடாயின்போது பெண் ஊழியர்களுக்கும் மாணவிகளுக்கும் விடுப்பு வழங்குவது குறித்த விவாதம் நீண்ட நாள்களாக தொடர்ந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு இது தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது மாதவிடாயின்போது விடுப்பு வழங்குவதற்கு எதிராக பேசிய அப்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "மாதவிடாய் ஏற்படும் பெண்ணாக கூறுகிறேன். மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு அல்ல. அது பெண்களின் வாழ்க்கை பயணத்தின் இயல்பான பகுதியாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு: மாதவிடாய் வராத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருக்கிறது என்பதற்காக பெண்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்சினைகளை நாம் முன்வைக்கக்கூடாது" என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தியாவை பொறுத்தவரையில் மாதவிடாய்க்கு விடுப்பு வழங்குவது குறித்து சட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் தனிப்பட்ட அளவில் விடுப்பு வழங்கலாம். பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் வகையில் ஸ்விக்கி, பைஜூஸ், ஜோமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் கொள்கை வகுத்துள்ளன.
பல உலக நாடுகளில் மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பெண் ஊழியர்கள், சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதித்த ஐரோப்பாவின் முதல் நாடு என்ற பெருமையை ஸ்பெயின் கடந்த 2021ஆம் ஆண்டு பெற்றது. இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் அரசு திட்டம்: இந்த நிலையில், தொழிற்சாலைகள், ஐடி துறை, ஆடை உற்பத்தி துறை, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக காங்கிரஸ் அரசு திட்டமிட்டு வருகிறது. சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்க சித்தராமையா தலைமையிலான அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து ஆய்வு செய்ய கிறிஸ்ட் பல்கலைக்கழக துறை தலைவர் (சட்டம்) சப்னா மோகன் தலைமையில் 18 பேர் அடங்கிய கமிட்டி அமைத்துள்ளது கர்நாடக சட்டத்துறை. இந்த கமிட்டியில் சட்ட, மருத்துவ, உளவியல் நிபுணர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், சட்டத்துறை அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த கமிட்டி ஏற்கனவே ஒரு முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த வாரம், மீண்டும் கூடி ஆலோசனை நடத்திய பின்னர் அறிக்கை சமர்பிக்க உள்ளது. அரசு ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கமிட்டி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: Breaking News LIVE: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை ஏர்ப்போர்ட்டில் பரபரப்பு