கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதன் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால் முறைகேடுகள் நடந்திருப்பதாக பல இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது.


பற்றி எரியும் EVM விவகாரம்: இந்த நிலையில், EVM தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதவில், "நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், வழங்கப்பட்டதாகத் தோன்ற வைக்க வேண்டும். ஜனநாயகம் மேலோங்குவது மட்டுமல்லாமல், சந்தேகத்திற்கு இடமின்றி நடைமுறையில் இருப்பதாகவும் தோன்ற வேண்டும்.


 






உலகம் முழுவதும் தேர்தல் நடைமுறைகளில், ஏறக்குறைய அனைத்து மேம்பட்ட ஜனநாயக நாட்டிலும் காகித வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவது இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்துவதில் நாமும் அதை நோக்கி நகர வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


மக்களவை தேர்தலின்போது, மகாராஷ்டிராவில் உள்ள வடமேற்கு மும்பை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை சேர்ந்த ரவீந்தர வைகர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


தேர்தல் ஆணையம் விளக்கம்: சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தது தொடர் சர்ச்சையை கிளப்பி வந்தது. இதனிடையே ரவீந்தர வைகரின் உறவினர் மங்கேஸ் பண்டில்கர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.


அதுமட்டும் இன்றி, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தனது மொபைல் போன் மூலம் இயக்கியதாக மங்கேஷ் பாண்டில்கர் மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எழுப்பப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) OTP மூலம் திறக்க முடியாது என்றும் அதை எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை என்றும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.