இந்த மாத தொடக்கத்தில் வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் தந்தன. கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கியது. இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத பெரிய திருப்புமுனையாக அமைந்தது.


தேர்தலில் தோல்வி அடைந்த பங்கஜா முண்டே: 


400 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்ட பாஜக கூட்டணி, 300 தொகுதிகளை கூட தாண்டவில்லை. பாஜக தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தனிப்பெரும்பான்மை கூட கிடைக்காத சூழலில், கூட்டணி கட்சிகளின் ஆதரவில் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது.


மக்களவை தேர்தலில் பாஜக சந்தித்த பின்னடைவுக்கு உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களே காரணம். இந்த இரண்டு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றி பாஜகவை பெரிய அளவில் பாதித்தது. 


மகாராஷ்டிராவில் பாஜகவை சேர்ந்த பல முக்கிய வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர். அந்த வகையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே, பீட் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


தற்கொலை செய்து கொள்ளும் ஆதரவாளர்கள்: சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஜ்ரங் மனோகர் சோன்வானே 6553 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பங்கஜா முண்டேவின் தேர்தல் தோல்வி காரணமாக அவரின் ஆதரவாளர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.


இதுவரை 4 பேர் தற்கொலையால் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட ஆதரவாளர்களில் ஒருவரின் வீட்டுக்கு சென்ற பங்கஜா முண்டே, தனது இரங்கலை தெரிவித்தார். அதோடு, இறந்தவரின் குடும்பத்தினருடன் சேர்ந்து அவர் குலுங்கி குலுங்கி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


 






தனது ஆதரவாளரின் வீட்டு சென்று, துக்கம் தாளாமல் பங்கஜா முண்டே அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவரான பங்கஜா முண்டே, மகாராஷ்டிர மாநில அமைச்சராக பொறுப்பு வகித்திருக்கிறார்.


தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.