வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கர்நாடகா முழுவதும் பல்வேறு இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை நடந்து வருகிறது.


லோக் ஆயுக்தா ரெய்டு


லோக்ஆயுக்தா அதிகாரிகள் டிஎஸ்பி மஞ்சுநாத், ஹரிஷ் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி ஆவணங்களையும் கைப்பற்றினர். பெங்களூரு, துமகுரு, ஹாவேரி, மைசூர் மற்றும் பிதார் மாவட்டங்களில் உள்ள பல அரசு அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தனியார் சொத்துக்களில் சோதனை நடந்து வருகிறது. சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைச் சோதனையாளர்கள் சரிபார்த்துக் கொண்டுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது.






கேஐஏடிபி அதிகாரி நரசிம்மமூர்த்தி


துமகுரு மாவட்டத்தில் உள்ள கேஐஏடிபி அதிகாரி நரசிம்மமூர்த்தி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஹாவேரி மாவட்டத்தில், ரானேபென்னூரில் உள்ள நிர்மிதி மையப் பொறியாளர் வகேஷ் ஷெட்டரின் வீடு மற்றும் ஹாவேரி நகர மாவட்ட ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நிர்மிதி அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடைபெற்று வருகிறது.


தொடர்புடைய செய்திகள்: CSK: தி.நகர் திருப்பதி கோயிலில் ஐ.பி.எல். கோப்பையுடன் சி.எஸ்.கே நிர்வாக குழு சிறப்பு பூஜை!


எந்தெந்த அதிகாரிகள் வீட்டில் சோதனை


ஐஏஎன்எஸ் கூற்று படி, பெங்களூரு பசவேஸ்வரநகரில் உள்ள பெஸ்கோம் (BESCOM) தொழில்நுட்ப இயக்குனர் ரமேஷின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. வேறொரு இடத்தில் நடந்த சோதனை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. மைசூருவில் உள்ள நிவேதிதாநகரில் உள்ள மைசூரு மாநகராட்சி அதிகாரி மகேஷ் குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 13 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. பிதார் மாவட்டத்தின் சிட்டகுப்பா தாலுகாவிலும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.






கடந்த மாதம் நடந்த சோதனை


கர்நாடகா லோக்ஆயுக்தா சமீபத்தில் ஒரு மாதம் முன்பு பெங்களூரு, பல்லாரி, பிதார், சித்ரதுர்கா, தாவங்கேரே மற்றும் கோலார் ஆகிய 8 அரசு அதிகாரிகளுடன் தொடர்புடைய 34 இடங்களில் சோதனை நடத்தியது. யெலஹங்கா நகர திட்டமிடல் (பிபிஎம்பி) கூடுதல் இயக்குனர் கங்கத்ரய்யாவிடம் இருந்து அதிகளவு பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் 7 இடங்களில் லோக்ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனையில், யெலஹங்கா, ஜே.சி.நகர், நாகவரா மற்றும் ஹெப்பல் ஆகிய இடங்களில் அரசு அதிகாரிக்கு சொந்தமான 14 அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. நெலமங்கலத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஐந்து ஏக்கர் விவசாய நிலமும், மல்லேஸ்வரத்தில் ரூ.3.65 கோடி மதிப்பிலான நிலமும் அவருக்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது நடந்து 1 மாதத்திற்கு பின் மீண்டும் இந்த ரெய்டு நிகழ்ந்துள்ளது.