காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு ஆறு நாள் பயணமாக சென்றுள்ளார். பயணத்தின் ஒரு அங்கமாக, கலிபோர்னியாவில் நேற்று அமேரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, அவர் உரையாற்றுவதை நிறுத்தும் விதமாக சிலர் காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினர்.


இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கியுள்ளன. காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியதற்கு ராகுல் காந்தி சிரித்ததாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விவேக் அக்னிஹோத்ரி ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தி இப்போது அனைத்து பிரிவினைவாத மற்றும் நகர்ப்புற நக்சல் குழுக்களின் தலைவராக கருதப்படுகிறார். அவரது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் இந்த வீடியோவில், மக்கள் காலிஸ்தான் கோஷங்களை எழுப்புகிறார்கள். அவர் புன்னகைக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா? ஆபத்தான காலக்கட்டம் வரபோகிறது" என குறிப்பிட்டுள்ளார்.


ராகுல் காந்தி வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, "
1984 சீக்கிய படுகொலைக்காக (காங்கிரஸ் கட்சியால் கட்டவிழ்த்துவிடப்பட்டது) ராகுல் காந்தி பேசும் போது அமெரிக்காவில் சிலர் கூச்சலிட்டனர். உங்களால் தூண்டப்பட்ட வெறுப்பின் நெருப்பு மிகப் பெரியது. அது இன்னும் எரிகிறது" என பதிவிட்டுள்ளார்.


காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியபோது, ராகுல் காந்தி சிரித்ததாக தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், "ராகுல் காந்தியை எதிர்க்க அமித் மால்வியா காலிஸ்தான் ஆதரவு சக்திகளை ஏன் ஆதரிக்கிறார். 


வீடியோவை மேலும் கேட்டிருந்தால், அந்த காலிஸ்தானி முழக்கங்களுக்குப் பதில் சொல்ல, மக்கள் எப்படி பாரத் ஜோடோ முழக்கத்தை எழுப்பினார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு முறையாவது மூவர்ண கொடியை தூக்கி கொண்டு ஒற்றுமையான இந்தியா என சொல்லி பாருங்கள். என்னை நம்புங்கள், உங்களை போன்ற ஒரு துரோகியும் நன்றாக உணர்வீர்கள்" என பதிலடி கொடுத்துள்ளார்.


 






வெறுப்பை விற்கும் சந்தையில் அன்பின் கடைகளை திறப்பதாக ராகுல் காந்தி கூறும்போது, சிலர் கோஷங்களை எழுப்பினர். அதற்கு மீண்டும், "வெறுப்பை விற்கும் சந்தையில் அன்பின் கடைகளை திறப்பேன்" என ராகுல் காந்தி பதில் அளித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்ன நடக்கிறது என்பதைப் பதிவுசெய்ய கையில் கேமராவுடன் எழுந்து நின்றனர். அப்போது பார்வையாளர்கள் சிலர், பாரத் ஜோடோ என கோஷங்கள் எழுப்பினர்.


அப்போது தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "எங்களைப் பற்றிய, காங்கிரஸ் கட்சியைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நாங்கள் எல்லோரிடமும் பாசம் வைத்துள்ளோம். யாரேனும் ஒருவர் என்ன பேசினாலும் பொருட்படுத்தாமல் வந்து ஏதாவது சொல்ல நினைத்தால், அவர் சொல்வதைக் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 


நாங்கள் கோபப்பட மாட்டோம். ஆக்ரோஷமாக இருக்கப் போவதில்லை. நாங்கள் அதை நன்றாகக் கேட்போம். உண்மையில், நாம் அவர்களிடம் பாசமாக இருப்போம். அவர்களிடம் அன்பாக இருப்போம். ஏனென்றால் அது நமது இயல்பு" என்றார்.