இந்திய நாட்டிற்காக பல பதக்கங்களை தேசிய அளவில் வென்று கொடுத்த மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் இன்று டெல்லியில் போராடி வரும் சூழலும், ஆண்டுக்கணக்கில் பயிற்சி செய்து மிகவும் போராடி வாங்கிய தங்களது பதக்கங்களை அவர்கள் கங்கை நதியில் நேற்று வீசச்சென்ற நிகழ்வும் நாட்டு மக்களிடைய மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.


மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்:


இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பா.ஜ.க. எம்.பி. பிரஜ்பூஷண்சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களான சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினிஷ் போகத், சங்கீத்போகத் ஆகியோருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.




தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசச்சென்ற அவர்களை, வட இந்திய விவசாயிகள் சமாதானப்படுத்திய பிறகு, அவர்கள் மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்த காரணத்தினாலும் தற்காலிகமாக அவர்கள் பதக்கங்கள் கங்கை நதியில் மூழ்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டிற்காக வாங்கிய பதக்கங்களை, அந்த நாட்டிற்காக களமிறங்கிய வீரர்களே வீசியெறியும் தருணம் அரங்கேறுவது உலக அளவில் இது முதன்முறை அல்ல.


முகமது அலிக்கு நிகழ்ந்த சோகம்:


கிரிக்கெட்டிற்கு சச்சின், கால்பந்திற்கு பீலே என்பது போல குத்துச்சண்டை என்றால் முகமது அலி. உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களாலும் மதிக்கப்படுபவரும், விரும்பப்படுபவரும் முகமது அலி. எவராலும் வீழ்த்த முடியாத அசகாய சூரனாக வலம் வந்த முகமது அலியே, தனது நாட்டிற்காக வாங்கிய ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை ஓஹியோ நதியில் வீசியெறிந்த சோக சம்பவம் இந்திய மல்யுத்த வீரர்கள் நேற்று கங்கை நதிக்கு சென்றதை பார்க்கும்போது நமது நினைவுக்கு வருகிறது.


நமது மண்ணில் சாதி, மதமும் மக்களை பிளவுபடுத்தி வைத்திருப்பது போல மேலை நாடு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமெரிக்காவில் நிறத்தால் மனிதர்களை பிளவுப்படுத்தி வைத்திருந்த காலம் அது (இன்றளவும் இருந்துகொண்டுதான் இருக்கிறது) 1960ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் லைட் ஹெவி வெயிட் பிரிவில் முகமது அலி தன்னுடைய அமெரிக்காவிற்காக தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார்.




நதியில் வீசப்பட்ட ஒலிம்பிக் தங்கம்:


தன்னுடைய சாதனையால் அமெரிக்காவில் தன்னுடைய கருப்பின மக்களின் மதிப்பு மாறிவிடும் என்ற நம்பிக்கையுடன் ரோமில் இருந்து அமெரிக்கா திரும்பியவருக்கு மிஞ்சியது ஏனோ ஏமாற்றமே. ஒலிம்பிக் தங்க மகன் முகமது அலி அங்குள்ள உணவகத்திற்கு சென்றபோது, அந்த உணவகத்தில் பணியாற்றிய பணிப்பெண் நாங்கள் கருப்பின மக்களுக்கு உணவு வழங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.


நாட்டிற்காக தங்கம் வென்றும் தனது நாடு தனக்கும், தன் மக்களுக்கும் தந்தது இதுதானா? என்று வேதனையில் மனம் உடைந்த முகமது அலி, தனது தங்கப்பதக்கத்தை ஓஹியோ நதியில் வீசியெறிந்தார். தனது சுயசரிதை புத்தகத்தில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ள முகமது அலி பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்த நாட்டிற்காக நான் வாங்கி வந்த பதக்கத்தை அணிய விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.




தலைகுனிவு:


அன்று முகமது அலி ஓஹியோ நதியில் தனது பதக்கத்தை வீசியெறிந்த சம்பவம் எப்படி அந்த நாட்டு அரசுக்கு தலைகுனிவோ, அதேபோல நமது வீரர்கள் நமது நாட்டிற்காக வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீச சென்றதும் நமது அரசுக்கும், நமக்குமே தலைகுனிவு ஆகும். உலக மக்களின் இதயத்தில் இடம்பெற்ற முகமது அலி தனது தங்கப்பதக்கத்தை ஓஹியோ நதியில் வீசியதை அந்த நாட்டு அரசாங்கத்தால் தடுக்க முடியவில்லை. ஆனால், நமது நாட்டு அரசு நமது வீரர்கள் பதக்கத்தை நதியில் வீசுவதை தடுக்குமா? அல்லது கங்கை நதி இந்திய மல்யுத்தத்தின் பதக்கத்தை விழுங்குமா? என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.