இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக, மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கமல்நாத் நியமிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்குப் பின், கட்சியின் நிரந்தரத் தலைவர் பதிவிக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, டெல்லியில் கட்சியின் தற்போதைய இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் கமல்நாத் இடையே சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு பிறகு பதவி விலகினார். அதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். இந்நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிக்கொடுத்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் கெலாட்- சச்சின் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல் அதன் இருத்தலையே கேள்வி கேட்பதாக அமைந்தது.
இந்நிலையில், கட்சிக்குள் அடிப்படை சீர்த்திருத்தம் வேண்டி 23 மூத்த தலைவர்கள் கடந்த ஆண்டு கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அதுவும் கொரோனா முதலாவது பெருந்தொற்று நாட்களில் காங்கிரஸ் கட்சி தனது நம்பகத்தன்மையை மீட்டுக் கொண்டிருந்த வேளையிலும், ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு மிகுந்த நேரத்திலும் இக்கடிதம் வெளியாகி இருந்தது.
அதிருப்தி நடவடிக்கையா (அ) கட்சியை வலுப்படுத்தும் முயற்சியா? என்று பிரித்து பார்க்க முடியாத வகையில் ஆனந்த சர்மா, வீரப்ப மொய்லி, குலாம் நபி ஆசாத், கபில் சிபல் போன்றத் தலைவர்களின் செயல்பாடுகள் இருந்து வந்தது. அதிலும், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் ஓய்வு பொதுக் கூட்ட விழாவில் இந்த அதிருப்தி போக்கு காணப்பட்டது. ஆசாத் போன்ற ஒரு திறன்மிகுந்த தலைவரை காங்கிரஸ் தலைமை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அதிருப்தி தலைவர்கள் குற்றம் சாட்டினர். அப்போது, பேசிய குலாம் நபி ஆசாத், " பாரத பிரதமர் நரேந்திர மோடி என்றுமே தனது சுயத்தை மறைக்காதவர், வெளிப்படையானவர்" என்று புகழாரம் சூட்டினார்.
கட்சி சீர்திருத்தம் தொடர்பாக சில தலைவர்கள் அனுப்பிய கடிதம், பொதுவெளியில் கசிந்தது தம்மை மிகவும் காயப்படுத்தியதாக தலைவர் சோனியா காந்தி வெளிப்படையாகவே தெரிவித்தார். மேலும், கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்தவுடன் காங்கிரஸ் தலைவர் பதிவுக்கு கட்டாயம் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். அடுத்த குடியரசுத்தலைவருக்கான தேர்தலில் சரத் பவாரை முன்மொழிவது குறித்து பேசப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இது இருக்கலாம் எனவும் பார்க்கப்பட்டது. பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்கு அடுத்த நாளே, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் பதவிக்கு கமல்நாத் நியமிக்கப்படுவதும் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.
மேலும், வாசிக்க:
Sharad pawar | குடியரசுத்தலைவர் போட்டியில் நானா? சரத் பவார் கேள்வி..!
காங்கிரசில் சேரும் பிரசாந்த் கிஷோர்.. பின்னணியில் ராகுல் பிரியங்கா