தேர்தல் வியூக நிபுணராக செயல்பட்டு வரும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நிகழ்த்தியதை அடுத்து இந்த கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது போன்ற சந்திப்பு முதல்முறை அல்ல என்றும் ஊடகங்களில் வெளியாவதை போல் இது பஞ்சாப் சிக்கலுக்கான சந்திப்பு அல்ல என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.


காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு பிறகு பதவி விலகினார். அதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். ஆனாலும் அடுத்த தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த கட்சி கூட்டங்களிலும் கூட சரியான முடிவுகள் எட்டப்படாமல் இருந்தே வந்தது.




இந்நிலையில் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார். அங்கு காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் மற்ற இடங்களில் அக்கட்சியால் வெற்றி பெற இயலவில்லை. இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கும் பிரசாந்த் கிஷோருக்குமான தொடர்பு இருந்தே வந்தது.


இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். இதனிடையே பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பஞ்சாப் அரசு ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் சார்பில் சித்து மற்றும் அமரிந்தர் சிங் இடையேயான மோதல் குறித்த ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.


இது ஒருபுறம் இருக்க, அடுத்த குடியரசுத்தலைவருக்கான தேர்தலில் சரத் பவாரை முன்மொழிவது குறித்து பேசப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இது இருக்கலாம் எனவும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் இந்த சந்திப்பு ஊடகங்களில் வெளியாவது போன்ர சந்திப்பு அல்ல என்ற தகவல் வெளியாகியுள்ளது.




குறிப்பாக பாஜகவுக்கு எதிராக மிகத்தீவிரமான முறையில் காங்கிரஸ் கட்சியால் செயல்பட முடியவில்லை என்றும் அதன் செயல்பாடுகள் மிக பழையதாக உள்ளதாகவும் விமர்சனங்கள் உள்ளன. பிரசாந்த் கிஷோரும் கூட காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார். இந்நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளுக்கு எதிராக செயல்பட நல்ல ஆலோசகர் அக்கட்சிக்கு தேவை என்ற நிலை உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனை ராகுல் மற்றும் பிரியங்கா விரும்புவதாகவும் சில முக்கிய தலைவர்களும் கூட இதற்கு சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது.


ஆனால் இதுவரை காங்கிரசில் சேர்வது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பிரசாந்த் கிஷோர் தரப்பில் இல்லை.