குடியரசுத் தேர்தல் வேட்பாளாராக நான் களமிறக்கப்படுவதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது. ஆளும் பாஜக 300-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. எனவே, தேர்தல் முடிவு என்னவென்று நான் உணர்ந்துள்ளேன். நான் குடியரசுத் தேர்தலில் வேட்பாளராக நிற்க மாட்டேன் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். 


2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் மிகத்தீவிரமாக முன்னின்று நடத்தி வருகிறார். அண்மைக் காலங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி, ஒய்எஸ்ஆர் காங்கரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் ஆகியோரிடம் நெருக்கமான அரசியல் உறவுகளை பிரஷாந்த் கிஷோர் பேணிக்காத்து வருகிறார்.   


        


இந்நிலையில், நேற்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். இந்த, சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் சரத் பவாரை முன்மொழிவது குறித்து பேசப்பட்டிருக்கலாம் என  தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இது இருக்கலாம் எனவும் பார்க்கப்பட்டது. 


இந்திய அரசியலமைப்புச சட்டத்தின் படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்றங்களில் தேந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், டெல்லி மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களித்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். வரவிருக்கும் 2022 குடியரசுத் தலைவரை தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் பெரும்பான்மையை ஆளும் பாஜக கொண்டிருக்கவில்லை. சமீபத்திய நிலவரப்படி, தேர்வாளர் குழவில் உள்ள 1,098,903 வாக்கு மதிப்பில்,பாஜக 474,102 வாக்கு மதிப்பைக் கொண்டுள்ளது. பெரும்பான்மையைப்பெற 549,452 வாக்கு மதிப்புகள் தேவைப்படுகிறது.


குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாகவே பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில், உத்தர பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு, மற்ற மாநில உறுப்பினர்களை விட அதிக மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, 2022 உ.பி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதையும் தீர்மானிக்கும் .


     


மேலும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம்  கட்சி இத்தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நவீன் பட்நாயக் ஆதரவு கிடைத்தால் எதிர்க்கட்சி வேட்பாளரை வெற்றி பெறவைக்க முடியும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்து வருகின்றனர். முன்னதாக, பிரஷாந்த் கிஷோர் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 


மேலும் வாசிக்க: 


காங்கிரசில் சேரும் பிரசாந்த் கிஷோர்.. பின்னணியில் ராகுல் பிரியங்கா