சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தெலங்கானா தவிர மீதமுள்ள 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. குறிப்பாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் தோல்வியை தழுவியது அந்த கட்சியின் தலைமையிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


கமல்நாத் பதவி பறிப்பு:


இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான கமல்நாத்தின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜிது பத்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பத்வாரி சாவ் தொகுதியில் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வியை தழுவியவர், மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக உமாங் சிங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.


காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் மிகவும் புகழ்பெற்றவரான கமல்நாத்திடம் இருந்து மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக தீபக் பாஜியே நீடிப்பார் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.


9 முறை  எம்.பி., முன்னாள் முதலமைச்சர்:


காங்கிரஸ் கட்சியின் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கும் கமல்நாத் 9 முறை மக்களவைக்கு தேர்வாகியுள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சுற்றுச்சூழல், டெக்ஸ்டைல், வணிகம், தொழில்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை என பல துறைகளின் அமைச்சர் பதவியை வகித்தவர். பல முக்கிய குழுக்களின் உறுப்பினராக இருந்துள்ளார்.


இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சர், மத்திய அமைச்சர், மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என நாட்டின் மிகப்பெரிய பொறுப்புகளை அலங்கரித்த கமல்நாத் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளார். இந்த சூழலில், சட்டமன்ற தேர்தல் தோல்வி எதிரொலியால் அவரது மாநில தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


மேலும் படிக்க: IANS செய்தி முகமை நிறுவனத்தை வாங்கிய அதானி! ஊடகத்துறையிலும் ஆதிக்கம்!


மேலும் படிக்க: அதிர்ச்சி.. குடித்துவிட்டு ரயில் ஓட்டினார்களா? ரத்தத்தில் மது அளவு.. சோதனையில் 1761 லோகோ பைலட்கள் தோல்வி